500 ரூபாய்க்கு 19 மளிகை பொருட்கள்..! எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம்..! அமைச்சர் செல்லூர் ராஜு தகவல்!!
ரேசனில் 500 ரூபாய்க்கு 19 மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் இன்று தொடங்கி வைத்தார். இந்த தொகுப்பை யார் வேண்டுமானாலும் வாங்கலாம்; எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளி மார்க்கெட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதுடன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு மளிகைப் பொருட்கள் தடையின்றி கிடைக்கவும், வெளி மார்க்கெட்டுகளில் விலையேற்றத்தை தடுக்கவும் ரேசன் கடைகள் மூலம் 500 ரூபாய்க்கு 19 வகை மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, இந்த திட்டத்தின் தொடக்க விழா மதுரையில் இன்று நடைபெற்றது. கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மலிவு விலை மளிகை தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுதல்படி கூட்டுறவுத் துறையின் மூலம் தமிழகத்திலுள்ள 23 ஆயிரத்து 486 முழுநேர நியாயவிலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு பண்டக சாலைகள், சிறு பல்பொருள் அங்காடிகள், நகரும் பண்ணை பசுமை கடைகள் ஆகியவற்றின் மூலம் பொதுமக்களுக்கு துவரம் பருப்பு, உளுந்து, மிளகாய் வத்தல், சமையல் எண்ணெய் உள்ளிட்ட 19 வகையான மளிகை தொகுப்புகள் 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இந்த மளிகைத் தொகுப்பில் உள்ள பொருட்கள் வெளிமார்க்கெட்டில் 600 ரூபாய் மதிப்புடையது. எனவே குறைந்த விலையில் நியாயவிலை கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதை பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் எத்தனை தொகுப்பு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தின் நோக்கமே வெளிமார்க்கெட்டில் மளிகைப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான்.
எனவே, ரேசன் கார்டுதாரர்கள் மட்டுமல்லாது அனைவரும் இந்த மளிகை தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம், தமிழகம் முழுவதும் 10 லட்சம் மளிகை தொகுப்புகள் இன்று விற்பனைக்கு வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.






