--- --:--:-- --

கொரோனா : ரேபிட் டெஸ்ட் கருவிகள் எவ்வளவு வாங்கப்பட்டது..? என்ன விலை..? வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்..! மு.க.ஸ்டாலின் அடுத்த அஸ்திரம்!!

20

கொரோனா பரிசோதனையை துரிதப்பித்த தமிழகத்திற்கு வாங்கப்பட்டுள்ள ரேபிட் டெஸ்ட் கருவிகள் எவ்வளவு? அவற்றின் விலை என்ன? என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடங்கியது முதலே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே பனிப்போர் தொடங்கி, இப்போது உச்சகட்ட மோதலாகி வருகிறது. கொரோனா விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகளை மு.க.ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். மேலும் மெத்தனமாக செயல்படுவதாகவும், எதிர்க்கட்சிகளின் ஆலோசனையை கேட்க மறுப்பதாகவும் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகிறார். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, கொரோனா விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்வதாகக் கூறி பதிலடி கொடுத்து வருகிறார்.

 

இந்நிலையில், கொரோனா பரிசோதனையை துரிதப்படுத்த, சீனாவில் இருந்து லட்சக்கணக்கில் ரேபிட் டெஸ்ட் கிட்கள் வரவழைக்க ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தொடர்ந்து கூறி வந்தது. ஆனால் இந்த கருவிகள் வந்து சேர்வதில் இதோ, அதோ என இழுபறியாகி ஒரு வழியாக நேற்று 24 ஆயிரம் கருவிகள் மட்டும் வந்து சேர்ந்த தாக அறிவிக்கப்பட்டது. அந்தக் கருவிகள் மூலம் இன்று தமிழகத்தில் சென்னை, கோவை, சேலத்தில் பரிசோதனைகளும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கியதில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தேகம் எழுப்பி கொரோனா தடுப்புப் பணியில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: கொரோனா நோய்த் தொற்று பரிசோதனைக் கருவி தனது மாநிலத்துக்கு எத்தனை வாங்கப்பட்டது, என்ன விலைக்கு வாங்கப்பட்டது, எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டது என்பதை சத்தீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

 

அதேபோல், தமிழக அரசும் எவ்வளவு கருவிகள், என்ன விலைக்கு வாங்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். நாடே உயிர் காக்கப் போராடிவரும் இந்த நேரத்தில், அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனை வலியுறுத்துகிறேன் என மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகளை மட்டுமே இதுவரை மு.க.ஸ்டாலின் குறை கூறி வந்தார், இப்போது கருவிகள் வாங்கியதில் வெளிப்படைத் தன்மை தேவை எனக் கூறி, சந்தேகம் எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon