இந்தியாவில் கொரோனா நிலவரம் : ஒரே நாளில் 1007 பேருக்கு பாதிப்பு..! உயிரிழப்பு 437 ஆக அதிகரிப்பு!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 1007 பேர் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 13,387 ஆகவும் உயிரிழப்பும் ஒரே நாளில் 23 அதிகரித்து 437 ஆகவும் உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

உலகை வதம் செய்து வரும் கொரோனா வைரஸ் பரவல், இந்தியாவிலும் கடந்த ஒரு வாரமாக வேகமெடுத்துள்ளது. தினமும் 1000-க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

 

நேற்று முன்தினம் ஒரே நாளில் 1300-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று 1007 பேர் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 13,387 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 23 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கையும் 437 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 1749 பேர் குணமடைந்துள்ளனர். மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. அங்கு 3,205 பேர் பாதிக்கப்பட்டு உயிரிழப்பும் 200ஐ கடந்துள்ளது. இதில் மும்பை நகரில் தான் கொரோனா ஆட்டம் படு வேகமாக உள்ளது.

 

மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக டெல்லியில் 1640 பேரும், தமிழகத்தில் 1267 பேரும் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ராஜஸ்தான், குஜராத், ம.பி. ஆகிய மாநிலங்களில் கடந்த ஓரிரு நாட்களாக கொரோனா பாதிப்பு மிக அதிகரித்து வருவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Leave a Reply