கொரோனா குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓவியங்களை வரைந்து அசத்தி வரும் காரமடை பேரூராட்சி ஊழியர் !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, தமிழகத்தில் நேற்று வரை 17,835 பேரிடம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 2739 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் 38 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளது.

 

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் நேற்று வரை 118 பேர் குணமடைந்துள்ளனர்.நேற்று மட்டும் 37 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை பலி எண்ணிக்கை 12 ஆக இருந்த நிலையில் இன்று 2 பேர் மேலும் உயிரிழந்ததால் 14 ஆக உயர்ந்துள்ளது எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.

 

அவர் மேலும் கூறுகையில், தமிழகத்தில்1.5 லட்சம் கொரோனா நோயாளிகளுக்குக் கூட சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள், வசதிகள் தயாராக உள்ளன எனவும்,அந்தளவிற்கு அதிகரிக்க வாய்ப்பில்லை என்றாலும் எந்த வித சவாலையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது எனவும்,இன்று 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.வரும் காலங்களில் இது பூஜ்ஜியமாக வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்தார்.மேலும்,தமிழகத்தில் இன்று ஒரே நாளில் திருச்சியில் கொரோனா சிகிச்செ பெற்று வந்த 32 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

மேலும்,தமிழக அரசு கொரோனா குறித்து பொதுமக்களிடையே பல்வேறு வகைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.அதன் ஒருபகுதியாக பொதுமக்கள் பார்வையில் படும் வகையில் சாலையோரங்களிலும்,சுவர்களிலும் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஓவியங்கள் தீட்டப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில் கோவை மாவட்டம் காரமடை பேரூராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் மணிகண்டன் என்பவர் கொரோனா குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து அசத்தி வருகிறார்.அந்த வகையில் கோவை – மேட்டுப்பாளையம் செல்லும் சாலையின் இருபுறமும் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து வருகிறார். பெரியநாயக்கன் பாளையம் பேரூராட்சி வளாக காம்பவுண்ட் சுவர்,பாலங்களின் சுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் பார்வையில் படும் இடங்களில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து வருகிறார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் முகக்கவசங்கள் அணிவதன் அவசியம் குறித்தும்,சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதன் நோக்கம் குறித்தும் இந்த ஓவியங்களின் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தி பொதுமக்களிடையே பாராட்டை பெற்று வருகிறார்.

 

ஓவியத்தில் விழித்திரு !விலகியிரு !! வீட்டிலிரு !!! கொடூர கொரோனாவை அழித்திடுவோம் !!! 144 மதித்திடுவோம் !!! என்பது போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

 

இதுகுறித்து காரமடை பேரூராட்சி ஒப்பந்த ஊழியர் மணிகண்டன் கூறுகையில் கொரோனா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓவியங்களை தீட்டுவது மனநிறைவை தருவதாகவும்,பொது மக்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வீட்டில் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

 

கொரோனா குறித்த காரமடை பேரூராட்சி ஒப்பந்த ஊழியரின் இந்த வகை ஓவிய விழிப்புணர்வு பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


Leave a Reply