கொரோனா குறித்து வதந்தி பரப்பிய 27 பேர் கைது.வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் — மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா எச்சரிக்கை !!!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா, கோவை கமிஷனர் சுமித் சரண், கோவை எஸ்.பி சுஜித் குமார் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் அம்மன் அர்ஜுனன், பி.ஆர்.ஜி.அருண் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.அத்தியாவசிய பொருட்களான பால்,மளிகை,காய்கறிகளை பொதுமக்கள் பெற்று செல்ல காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை கால அவகாசம் தரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் போதிய காரணமின்றி சாலைகளில் சுற்றித்திரியும் மக்களால் வைரஸ் பரவல் நடைபெற வாய்ப்புள்ளது.இதனை தடுக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்களை பெற கடைகளுக்கு வரும் பொதுமக்கள் போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டது.அதனையும் மீறி பொதுமக்களில் சிலர் சாலைகளில் போதிய காரணமின்றி சுற்றித்திரிந்து வருகின்றனர்.

அதனை தடுக்கும் பொருட்டு மேற்கு மண்டல காவல் துறை சார்பில் பொது இடங்களில் உரிய காரணமின்றி சுற்றித்திரிந்த 39,130 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , 28,905 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா தகவல் தெரிவித்தார்.மேலும்,கோவை மாவட்டத்தில் போதிய காரணமின்றி பொது இடங்களில் சுற்றித்திரிந்தவர்கள் மீது 7300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 8212 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 7072 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும்,கொரோனா வைரஸ் குறித்து பொய்யான செய்திகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ததாக மேற்கு மண்டல அளவில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,கோவை மாவட்டத்தில் மட்டும் 3 பேர் கைது செய்யப்படுள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும்,சமூக வலைத்தளங்களில் கொரோனா குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஐ.ஜி எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் , சென்னைக்கு அடுத்தப்படியாக கோவையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் எச்சரிக்கையுடன் வீட்டிற்கு ஒருவர் மட்டுமே அத்தியாவசிய பொருட்களை பெற வர வேண்டும் எனவும் , சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகள் சீல் வைக்கப்படும் எனவும்,அப்படி இருந்தால் மட்டுமே லாக் டவுன் காலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும் எனவும்,பொதுமக்களும் எச்சரிக்கையுடன் போதிய சமூக இடைவெளியை கடைபிடித்தும்,வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தும் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் மேற்கு மண்டல ஜ.ஜி கேட்டுக்கொண்டுள்ளார்.






