முதல்வர் நிவாரண நிதிக்கு கோடி கணக்கில் குவிந்த நன்கொடை
கொரொனா வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை சுமார் 134 கோடியே 63 லட்சம் ரூபாய் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரொனா தடுப்பு பணிகளுக்காக நிதி வழங்கிய அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
அதிகமாக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சார்பில் 14 கோடியே 10 லட்சத்து 72 ஆயிரத்து 497 ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் கூட்டமைப்பு ஹூண்டாய் மோட்டார் ஆகியவை தலா 5 கோடி நிதி வழங்கியுள்ளன. சொலாமண்டலம், இன்வெஸ்ட்மெண்ட் 3 கோடியும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள் கியூப் இன் இன்வெஸ்ட்மெண்ட் சார்பில் தலா இரண்டு கோடியும் அளித்துள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் காமராஜர் துறைமுகம் ஈச்சர் குரூப் மற்றும் அதிமுக சார்பில் தலா ஒரு கோடி ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 536 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 314 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் 82 லட்சத்து 32 ஆயிரத்து 644 அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறியதாக தமிழகம் முழுவதும் இதுவரை ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 148 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.






