கையில் காசுமில்லை… அத்தியாவசிய பொருட்களும் கிடைக்கல… மதுரையில் கொரோனாவால் சீல் வைக்கப்பட்ட பகுதி மக்கள் திடீர் போராட்டம்!!

Publish by: செய்தி்ப் பிரிவு --- Photo : Arrangement


மதுரையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் வசித்த பகுதியை 20 நாட்களாக சுகாதார அதிகாரிகள் சீல் வைத்த நிலையில், அப்பகுதியில் வசிக்கும் தினக்கூலிகள் மற்றும் ஏழை மக்கள் தங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை;கையில் பணமும் இல்லை எனக் கூறி போராட்டத்தில் குதித்த தால் பரபரப்பு ஏற்பட்டது.

 

கொரோனா வைரஸ் பாதிப்பால், தமிழகத்திலேயே முதல் உயிரிழப்பு மதுரையில் தான் ஏற்பட்டது. மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த 55 வயது நபர், கடந்த மார்ச் 24-ந் தேதி காலை கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சைக்கு பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். உயிரிழந்த நபர், டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்களுடன் தொடர்பில் இருந்ததால் அவருக்கு இந்த வைரஸ் பரவியதும், அவருடைய குடும்பத்தினருக்கும் கொரோனா அறிகுறி இருப்பதும் உறுதியானது.

இதையடுத்து உயிரிழந்த நபர் வசித்த மதுரை அண்ணா நகரில், அவருடைய வீட்டைச் சுற்றியுள்ள யாகப்பா நகர் உள்ளிட்ட 4 தெருக்களை சுகாதார அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் கடந்த 20 நாட்களாக வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டனர். இப்பகுதியில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் ஏழைகள் மற்றும் தினசரி வருவாய் ஈட்டும் கூலித் தொழிலாளர்கள் என்பதால், அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

 

இந்நிலையில், இன்று காலை, 20 நாட்களாக வீடுகளுக்குள் முடங்கியுள்ளதால், தங்கள் கைவசம் பணமுமில்லை; அத்தியாவசியப் பொருட்களும் கிடைக்கவில்லை என்று கூறி திடீரென போராட்டத்தில் குதித்தனர். மேலும் தங்கள் பகுதியை சீல் வைத்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தளர்த்த வேண்டும் எனவும் கூட்டமாக நின்று ஆவேசமாக குரல் எழுப்பியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு விரைந்த அதிகாரிகள், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் தினசரி உணவு கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறி பொது மக்களை சமாதானப்படுத்தியதால் போராட்டத்தை கைவிட்டனர்.


Leave a Reply