மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சில் ஆலோசனை: மாஸ்க் அணிந்து பங்கேற்ற பிரதமர் மோடி..! முதல்வர்களும் அப்படியே!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : எம்.கே.டி


கொரோனா வைரஸ் தடுப்பு நிலவரம் மற்றும் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் பிரதமர் மோடி மற்றும் அனைத்து மாநில முதல்வர்களும் மாஸ்க் ( முகக் கவசம்) அணிந்தபடி பங்கேற்றனர்.

கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் ஆரம்பித்தது முதலே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால், அதி முக்கியம் வாய்ந்த ஆலோசனைக் கூட்டங்கள் கூட வீடியோ கான்பரன்ஸ் மூலமே நடத்தப்படுகின்றன.

 

பிரதமர் மோடியும், கடந்த 3 வாரங்களாக வீடியோ கான்பரன்ஸ் மூலமே, மத்திய அமைச்சரவைக் கூட்டம், மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம் போன்ற முக்கிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்தியா சுதந்திரம் பெற்ற பின், இத்தனை வருட காலத்தில் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டது இந்த கொரோனா வைரஸ் பீதியில் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, முகக் கவசம் (மாஸ்க்) அணிவதும் அவசியம் என்ற நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளோம். இன்றைய நிலையில், உலகின் ஜனத்தொகையில் முக்கால்வாசிப்பேர் முகக் கவசம் அணிந்தே காணப்படுகின்றனர். இந்நிலையில் இன்று மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி மாஸ்க் அணிந்தபடி பங்கேற்றார். மோடியைப் பின்பற்றி அனைத்து மாநில முதல்வர்களும் முகக்கவசம் அணிந்தபடியே இந்த ஆலோசனையில் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply