கொரோனா ரேபிட் டெஸ்ட் கருவிகள் இந்தியாவுக்கு வந்ததா? இல்லையா? குழப்பும் தமிழக அதிகாரிகள்!!
கொரோனா பாதிப்பை சில நிமிடங்களில் விரைவாக கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கருவிகள் , தமிழகத்திற்கு எப்போது வரும் என்ற பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில், தமிழக அதிகாரிகள் கூறி வரும் தகவல்கள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கருவிகள் டெல்லிக்கு வந்து சேர்ந்து விட்டதாக தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் நேற்று தெரிவித்த நிலையில், அந்தக் கருவிகள் இன்னும் இந்தியாவுக்கே வந்து சேரவில்லை என சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்ற போதிலும், இந்த வைரஸ் தொற்று அறிகுறி உள்ளதா? என்பதை கண்டறிய பெரும்பாலானோரிடம் பரிசோதனைகள் நடத்துவதும் அவசியம் என்றே கூறப்படுகிறது. ஆனால் தற்போதைய நிலையில், இந்தியா முழுவதும் இந்த பரிசோதனை நடத்துவதில் பெரும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. ஏனெனில், பரிசோதனைக்கான நவீன கருவிகள் போதுமான அளவில் இல்லாததும், சோதனை முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஆவதுமே இதற்கு காரணம்.
அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற இந்தியாவை விட மக்கள் தொகை குறைவான நாடுகளில், 25 லட்சம், 10 லட்சம் என வட்சக்கணக்கானோரிடம் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இதுவரை 1 .25 லட்சம் பேரிடமும், தமிழகத்தில் 7500 பேரிடமும் மட்டுமே கொரோனா பரிசோதனையே நடத்தப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இதனால் அதிவிரைவாக கொரோனா சோதனை நடத்த ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் எனப்படும் கருவிகளை சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய ஆர்டர் செய்துள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கடந்த 10 நாட்களுக்கு முன்னரே தெரிவித்தனர்.

இந்த கருவிகள் மூலம் 15 முதல் 30 நிமிடத்திற்குள் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதா? இல்லையா? என்பதை கண்டறிய முடியும் என்பதால், இந்தக் கருவிகள் தமிழகம் வந்த பின்னரே லட்சக்கணக்கானோரிடம் பரிசோதனை நடத்த தமிழக சுகாதாரத் துறை திட்டமிட்டிருந்தது. இந்தக் கருவிகள் ஏப்ரல் 10-ந் தேதி தமிழகம் வரவுள்ளதாகவும், அதன்பின் பரிசோதனைகள் தீவிரம் அடையும் என தமிழக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷும் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கூறி வந்தார்.
ஆனால் நேற்று (10-ந்தேதி) செய்தியாளர் சந்திப்பில் வழக்கத்துக்கு மாறாக பீலா ராஜேஷ் அமைதியாக அமர்ந்திருக்க, தலைமைச் செயலாளர் சண்முகம் பேட்டியளித்தார். அப்போது 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் மட்டும் டெல்லிக்கு வந்துள்ளதாகவும், அதனை மாநிலங்களுக்கு மத்திய அரசு பிரித்து அனுப்ப உள்ளதால், தமிழகம் வந்து சேருவதில் காலதாமதம் என புதிய தகவலை வெளியிட்டார். தலைமைச் செயலாளர் இப்படி கூறும் போதே, தமிழகம் ஆர்டர் செய்த ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை மத்திய அரசு ஏன் பங்கு பிரிக்க வேண்டும் என்ற கேள்விகளும் எழுந்தன.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், இந்த ரேபிட் டெஸ்ட் கருவிகள் இன்னும் சீனாவில் இருந்து இந்தியாவுக்கே வந்து சேரவில்லை என்ற புது குண்டை, தூக்கிப் போட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறுகையில்,
கொரோனா பாதிப்பை உடனடியாக அறிய உதவும் கருவியான ரேபிட் டெஸ்ட் கருவிகள் இன்னும் இந்தியாவுக்கே வந்து சேரவில்லை என்றார்.
ஏன் வரவில்லை? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ரேபிட் டெஸ்ட் கருவிகள் இதுவரை இந்தியாவுக்கு வந்து சேராததற்கான காரணங்கள் தெரியவில்லை என்றார். இப்படி தடாலடியாக ரேபிட் டெஸ்ட் கருவிகள் இந்தியாவுக்கே வரவில்லை என அவர் பதிலளித்தது அதிர்ச்சி அளிப்பதாக உள்ள நிலையில், இதற்கு தமிழக அரசுத் தரப்பில் என்ன விளக்கம் அளிக்கப்படுமோ? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.






