தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் இருந்து குப்பைகளை அகற்றும் தூய்மை பணியாளர்கள்!
தேனி மாவட்டத்தில் கொரொனா நோய் தொற்று உள்ளவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களின் வீடுகளிலிருந்து குப்பைகள் என்ன முறையில் சேகரிக்கப்பட்டு, எந்த முறையில் பாதுகாப்பாக அகற்றப்படுகிறது?
தேனி மாவட்டத்தில் 40 பேர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தேனி நகராட்சி பகுதியில் இருவருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிக்கு தினமும் காலை செல்லும் இரண்டு தூய்மைப் பணியாளர்கள் பிரத்தியேக கவச உடை முக கவசம் அணிகிறார்கள்.
பின்னர் அவர்களுக்கு உடல் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. அவர்கள் குப்பைகளை வாங்க செல்லும் பைகளும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் வீடுகளுக்கு சென்று குப்பை சேகரிக்கும் தூய்மைப் பணியாளர்கள் அந்த குப்பைகளை தாங்கள் எடுத்து சென்ற பைகளில் வைத்து எடுத்து வருகிறார்கள்.
பின்னர் மீண்டும் ஒருமுறை அவர்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. இதனையடுத்து ஆள் நடமாட்டம் இல்லாத வன பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு இந்த குப்பைகள் எரிக்கப்படுகின்றன. அந்த பகுதி முழுவதும் தீயணைப்புத் துறையினரால் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. சுகாதார ஆய்வாளர் களின் கண்காணிப்பில் இந்த பணிகள் நடைபெற்று வருவதாக கூறுகிறார்கள் தேனி நகராட்சி அதிகாரிகள்.






