கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக நகர்ந்துள்ளதா? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிர்ச்சி ரிப்போர்ட்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று சமூக பரவல் என்ற 3-வது கட்டத்தை எட்டியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம் ஆர்) அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து இதுவரை 6500 பேருக்கு மேல் பாதிப்பு உறுதியாகி, பலி எண்ணிக்கை 200ஐ கடந்துள்ளது. இதுவரை இந்த வைரஸ் தொற்று, வெளிநாட்டிலிருந்து வந்தோர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தோருக்கு மட்டுமே உறுதியாகி உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இது கொரோனா வைரஸ் பரவலின் 2-ம் கட்டம் என்று கூறப்படுகிறது. இதன் அடுத்த கட்டமான 3-வது ஸ்டேஜ் என்பது தான் மிகவும் அபாயகரமானது.

 

வெளிநாடு சென்று வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பு உள்ளவர்கள் அல்லாது பொதுமக்களிடையே இந்த வைரஸ் பரவலைத் தான் சமூக பரவல் என்னும் 3-ம் கட்டம் எனக் கூறப்படுகிறது. இப்படி சமூக அளவில் வைரஸ் பரவினால் யார் மூலம் யார்? யாருக்கு ? பரவியது என்பதை கண்டறிய முடியாது. உயிரிழப்புகளும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எகிறிவிடும். இந்த நிலைமை தான் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இப்போது உருவாகி கொத்து கொத்தாக செத்து மடிகின்றனர்.

 

இதனாலேயே இந்தியாவிலும் 2-ம் கட்டத்திலிருந்து 3-வது கட்டத்திற்கு கொரோனா வைரஸ் பரவி விடக் கூடாது என தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கும் போடப்பட்டு மக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என கடும் கெடுபிடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

ஆனால், ஐசிஎம் ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட ஆய்வின் முடிவுப்படி, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் 3-ம் கட்டத்திற்கு நகர்ந்து சமூகப் பரவலாக மாறியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்தியா முழுவதும், மார்ச் 15-ந் தேதிக்கு முன்னர் ஐசிஎம்ஆர் தரப்பில் பரவலாக முதல் கட்டமாக எடுக்கப்பட்ட ரேண்டம் சோதனைப்படி, கொரோனா பரவல் தாக்கம் பெரிய அளவில் பரவவில்லை என்ற ஒரு கருத்தை கூறியிருந்தது. ஆனால் பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 2-ந் தேதி வரையிலான இரண்டாவது ரேண்டம் சோதனையின் முடிவுகளை ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 

கடந்த பிப்ரவரி 15-ந் தேதி முதல் ஏப்ரல் 2-ந் தேதி வரையில் நாடு முழுவதும் கடுமையான சுவாச நோயால் (SARI) பாதிக்கப்பட்ட 5911 பேரிடம் கொரோனா சோதனைகளை ஐசிஎம்ஆர் நடத்தியுள்ளது. இப்படி நாடு முழுவதும் 20 மாநிலங்களில் 52 மாவட்டங்களில் சோதனை நடத்தியதில் 104 பேருக்கு வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இந்த நோய் பாதித்தவர்களில் 40 பேர் (39.2 சதவீதம்) இதுவரை வெளிநாடு சென்று வந்தவர்கள் இல்லை என்பதுடன் எந்த ஒரு வெளிநாடு சென்று வந்த நபருடனும், அவர்களுக்கு நேரடி தொடர்பும் கிடையாது. அப்படி இருந்தும், இத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தான் அதிர்ச்சியாக உள்ளது.இப்படியாக 15 இந்திய மாநிலங்களில் கடுமையான சுவாச நோய் பாதிப்பு இருப்பவர்களில் 1 சதவீதம் பேருக்காவது, கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

 

இதில் குஜராத்தில் 792 நோயாளிகளை பரிசோதித்ததில் 13 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
தமிழகத்தில் 577 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையுல் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
மகாராஷ்டிராவில் 553 நோயாளிகளை பரிசோதித்ததில் 21 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

ஐசிஎம்ஆர் நடத்திய முதல்கட்ட சோதனையின்போது இந்த கடுமையான சுவாசப் பாதிப்பு நோயாளிகள் ஒருவருக்குக்கூட, கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்படவில்லை என்ற நிலையில் இப்போது பாதிப்புள்ளது உறுதியாகியுள்ளது. இதில் பெரும்பாலான நோயாளிகள் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் என்பதும் கூடுதல் தகவலாக உள்ளது. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கொரோனா பாதிப்பு உறுதியானவர்களில் 83.3% பேர் ஆண்கள்தான் என்றும் இதில் 81.4 சதவீதம் பேர் 50 வயதுக்கு மேற்பட்டோர் என்றும் ஆய்வு கூறுகிறது.

 

இரு வாரங்களுக்கு முன்பு ஐசிஎம்ஆர் வெளியிட்ட முதலாவது ஆய்வு முடிவின்படி, இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூகப் பரவல் என்ற மூன்றாவது ஸ்டேஜ்க்கு செல்லவில்லை என்று கூறியிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த ஆய்வறிக்கை மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதனால் கொரோனா பாதிப்பு அதிகம் பரவியுள்ள மாவட்டங்களில் அதிவிரைவு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டியது மிக அவசியம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.

 

கொரோனா பரவல் தொடர்பாக ஐசிஎம்ஆர் இப்படி அபாய எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மத்திய சுகாதார அமைச்சகமோ கொரோனா வைரஸ் பரவல் 3-ம் கட்டத்துக்கு நகர்ந்துள்ளதாக வெளியாகும் தகவல் உண்மையில்லை; 2-ம் கட்டத்தில் தான் நீடிக்கிறது என அறிவித்துள்ளதும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


Leave a Reply