கொரோனாவால் 76 நாள் ஊரடங்கு முடிவுக்கு வந்தது..! சீனாவின் ஊகான் வாசிகள் ஜாலியாக ஊர் சுற்ற அனுமதி!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : கோப்பு படம்


கொரோனா வைரஸ் மூதன் முதலில் பரவிய சீனாவின் ஊகான் நகரில் 76 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு முடிவுக்கு வந்து அந்நகரவாசிகள் ஜாலியாக ஊர் சுற்ற கிளம்பியுள்ளனர்.

 

உலக நாடுகள் அனைத்தையும் தற்போது சின்னாபின்னமாக்கி வரும் கொரோனா வைரஸ், முதன் முதலாக சீனாவின் ஊகான் நகரில் தான் தன் ஆட்டத்தை தொடங்கியது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 11 மில்லியன் (1.10 கோடி) மக்கள் வசிக்கும் ஊகான் நகரை ஒட்டுமொத்தமாக முடக்கியது சீனா. கடந்த ஜனவரி 23-ந் தேதி முதல் அந்நகரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

 

இதனால் நகரில் இருந்து மக்கள் வெளியேறவோ, வெளியாட்கள் செல்லவோ தடை விதிக்கப்பட்டது. மக்களின் தேவைக்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுத்தது சீன அரசு. கடும் கட்டுப்பாடுகளை விதித்து அனைத்து மக்களையும் ஒட்டு மொத்த மருத்துவ பரிசோதனைக்கும் சீன அரசு உட்படுத்தியது.

இப்படி சீனா எடுத்த அதிரடி நடவடிக்கைகளால், 3300-க்கும் மேற்பட்ட உயிர்களை பறி கொடுத்தாலும் அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. சீனாவில் கொரோனா பரவத் தொடங்கிய பிறகு, அங்கு நேற்று முதல் முறையாகப் புதிதாக உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை.

 

இந்நிலையில், 76 நாட்களுக்குப் பிறகு ஊகான் நகரில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் அந்நகர மக்கள் படு உற்சாகமாக வெளியில் நடமாடத் தொடங்கியுள்ளனர். அங்குள்ள நதிக்கரையில் திரண்ட மக்கள், குடும்பத்துடன் ஜாலியாகவும் உற்சாகமாகவும் பொழுதைக் கழித்து கொண்டாடினர்.

 

ஊகான் நகர் பொதுமக்கள் இப்படி ஒட்டு மொத்தமாக வீடுகளை விட்டு ஊர் சுற்ற கிளம்பியதால் அந்நகர சாலைகளில் நீண்ட நாட்களுக்குப் பிறகு போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்பட்டது. கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டு விட்டாலும், மாஸ்குகள் அணிவது, வெப்ப நிலை பரிசோதிப்பது என்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உகான் நகரில் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்று அந்நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

இதனால் மக்கள் மாஸ்க் அணிந்த படியே தான் வெளியில் நடமாடி வருகின்றனர். அந்நகரில் உள்ள பெரும் தொழில் நிறுவனங்களும் உற்பத்தியைத் தொடங்கியுள்ளதால், ஊகான் நகரில் சகஜ நிலை திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply