--- --:--:-- --

அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டலுக்கு அடிபணிவதா..? மாத்திரை ஏற்றுமதி செய்யும் முடிவுக்கு வெங்கடேசன் எம்.பி., கடும் கண்டனம்!!

00

கொரோனா தொற்றால் சொந்த நாட்டு மக்கள் மருந்துகளுக்காக திணறும் போது, அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிந்து ஏற்றுமதி செய்ய ஒப்புக் கொண்டது அடிபணிவதற்கு சமம் என மார்க்சிஸ்ட் எம்.பி.
சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

கொரோனா வைரஸ் தொற்றால் உலக நாடுகள் அலறி வருகின்றன. இந்த வைரசுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்தியா அதிகம் தயாரிக்கும் ஹைட்ராக்சி குளோரோ குயின் என்ற மாத்திரையை நோய்த் தொற்றுக்கு ஆளான வர்களுக்கு பயன்படுத்துகிறது. இந்த நிலையில், இந்தியாவிலும் சொரோனா தாக்கம் அதிகரித்ததால், அமெரிக்காவுக்கான மாத்திரை சப்ளையை இந்தியா நிறுத்திவிட்டது.

 

ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப்போ, மாத்திரைகளை சப்ளை செய்யாவிட்டால் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்த நிலையில், இந்தியா இந்த மருந்து ஏற்றுமதி செய்ய இப்போது சம்மதித்துள்ளது. இந்தியாவின் இந்த நிலைப்பாட்டுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இது தொடர்பாக மதுரை மக்களவை எம்.பி.,யான சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 

கொரோனா வைரஸ் பரவல் இந்திய நாட்டின் சக்கரங்களையே சுழல விடாமல் நிறுத்தி வைத்திருக்கிற நேரம் இது. மருத்துவ மனைகள் போதுமா? படுக்கைகள் போதுமா? வென்டிலேட்டர்கள் போதுமா? முக மறைப்புகள் போதுமா? சானிட்டைசர் போதுமா? இப்படி பல கேள்விகளால் பரிதவித்து நிற்கிறார்கள் அல்லும் பகலும் அயராது போராடும் மருத்துவர்கள். மாநில அரசுகளோ நிலைமையை கையாள்வதில் திணறிக்கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் கொரொனா சிகிச்சைக்கு பயன்படத்தக்க ஹைட்ரொக்சி க்ளோரோ குயின் மருந்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய மோடி அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்தியா இம் மருந்து ஏற்றுமதிக்கு உடன்படாவிட்டால் “எதிர் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டியிருந்தார். டிரம்ப் மிரட்டல் வெளி வந்த சில மணி நேரத்திற்குள்ளாகவே மோடி அரசு ஏற்றுமதிக்கான முடிவை எடுத்திருப்பது அப்பட்டமான சரணாகதி ஆகும்.

 

நாம் அமெரிக்க மக்களையும் நேசிப்பவர்கள்தான். ஆனால் அமெரிக்காவைப் போன்று நான்கு மடங்கு மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் கைவசம் இருக்கிற மருத்துவ இருப்புகளை இழக்காமல் பாதுகாக்க வேண்டிய தருணமல்லவா இது.

 

ஈரானில் மக்கள் கொரோனா தொற்றால் செத்து மடிகிற வேளையிலும், கியூபா உலகின் பல நாடுகளுக்கும் மனித குலத்தை காப்பாற்ற மருத்துவர்களை அனுப்புகிற வேளையிலும், அந்த நாடுகளின் மீதான தடைகளை நீக்க மறுக்கிற அமெரிக்காவின் ஆணவத்திற்கு இந்தியா ஏன் அடி பணிய வேண்டும்?

 

ஜனவரி மாதமே கொரோனாவின் அபாயத்தை உலகம் உணரத்துவங்கிய நிலையில் மார்ச் மாதம் வரை நாம் ஏற்றுமதியை அனுமதித்தது கடும் விமர்சனத்துக்கு உரியது. இந்நிலையில் மீண்டும் ஏற்றுமதிக்கு அனுமதித்தது இந்திய மக்களின் மருத்துவ சேவையை பதட்டத்துக்கு உட்படுத்தும் முடிவாகும்.

 

தன் நாட்டு மக்களின் தேவையை கேட்டுப்பெற அந்நாட்டின் அதிபர் எவ்வளவும் முயற்சி செய்யலாம். ஆனால், மிரட்டித்தான் உதவியை கேட்பார் என்றால் அதற்கு செவிசாய்ப்பது அடிபணிவதற்க்கு ஒப்பானதாகும் என சு.வெங்கடேசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon