வரும் 14ம் தேதி வரை கோவை மாவட்டத்தில் அனைத்து அம்மா உணவகங்களிலும் உணவு உட்கொள்பவர்களின் உணவு கட்டணத்தை கோவை மாவட்ட அ.தி்மு.க ஏற்கும் என அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார் !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கொரோனா பாதிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆட்சியர் ராசாமணி,மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா,மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார்,அம்மன் அர்ச்சுனன்,எட்டிமடை சண்முகம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுடன் ஆலோசணை மேற்கொண்டார்.

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்க தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும்,கோவை மாவட்டத்தில் இதுவரை 8 லட்சத்து 7ஆயிரத்து 920 குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்கப்பட்டுள்ளது எனவும்,குடும்ப அட்டை இல்லாத திருநங்கையர்களுக்கும் அரிசி,பருப்பு உள்ளிட்ட தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

 

மேலும்,தமிழகத்தின் அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் நடமாடும் காய்கறி அங்காடிகள் செயல்பட்டு வருவதாகவும்,காய்கறி தட்டுப்பாடு ஏற்படும் என பொதுமக்கள் நேரில் சென்று வாங்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார்.கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனை,அரசு பொது மருத்துவமனை மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள்,தூய்மை பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருவதாகவும் நோயாளிகளுக்கான போதிய படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

 

மேலும்,கோவை மாவட்டத்தில் இதுவரை 300 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதில் 234 பேருக்கு நோய் இல்லை எனவும்,64 பேருக்கு உறுதி என முடிவுகள் வந்துள்ளதாகவும், அதில் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டினார்.இதேபோல் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 2332 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கபடுகின்றனர் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

மேலும்,பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களான அரசு பொது மருத்துவமனை,காய்கறி அங்காடி,உழவர் சந்தை போன்ற 16 இடங்களில் கிருமி நாசினி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,16 அதிநவீன வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

 

கோவை மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்களில் தினசரி 20 ஆயிரம் பேர் உணவு உட்கொள்வதாகவும்,வரும் ஏப்ரல் 14 ம் தேதி வரை அங்கு உணவு உட்கொள்பவர்களின் கட்டணத்தை கோவை மாவ்ட்ட அதிமுக ஏற்கும் எனவும் தெரிவித்த அமைச்சர் வேலுமணி ஊரடங்கை பயன்படுத்தி ஊடகங்கள் உட்பட எந்த நிறுவனமும் ஆட்குறைப்பு,கட்டாய ஊதிய பிடித்தம் போன்றவற்றில் ஈடுபட கூடாது என்றும், வாடகை வீடுகளில் வசிப்போரிடம் வாடகை வசூலிக்க கூடாது எனவும் எச்சரித்தார்.

 

ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைத்து வீடுகளில் இருக்க வேண்டும் என்றும் தனியார் மருத்துவமனைகள் எப்படிப்பட்ட நோயாளியாக இருந்தாலும் பாரபட்சமின்றி சிகிச்சையளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.


Leave a Reply