ஏப்ரல் 14-ந் தேதிக்கு பின் ஊரடங்கு தளர்த்தப்படுமா..? மேலும் தொடருமா..? மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : கோப்பு படம்


கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அமைச்சரவையின் மேல்மட்டக் குழுக் கூட்டம் இன்றும், அமைச்சரவைக் கூட்டம் நாளையும் பிரதமர் மோடி தலைமையில நடைபெற உள்ளது. இதில் ஏப்ரல் 14-ந் தேதிக்குப் பிறகு ஊரடங்கை தளர்த்துவதா? நீடிப்பதா? என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

 

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24-ந் தேதி நள்ளிரவு முதல் வரும் 14-ந் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவில், இப்படி ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் 3 வாரங்களுக்கு போடப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த ஊரடங்கால், கொரோனா அச்சம் ஒரு பக்கம் மக்களை பீதியில் ஆழ்த்தினாலும், பல கோடி மக்களின் அன்றாட வாழ்வாதாரம் முடங்கிப் போய் உள்ளது. அனைத்து தொழில்களும் முடங்கி, ஒட்டு மொத்த நாடே ஸ்தம்பித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் இப்போது தான் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில், அடுத்துலரும் நாட்களில் பெரும் விளைவுகளை ஏற்படுத்துவது நிச்சயம் என்றே கூறப்படுகிறது. இதனால் நாட்டில் ஊரடங்கு உத்தரவு மேலும் ஒரு மாதம் அல்லது 2 மாதம் வரை கூட நீடிக்கப்படலாம் என்ற செய்திகள் வெளியாகி மக்களை மேலும் பீதியடையச் செய்துள்ளது.

 

இந்நிலையில், மத்திய அமைச்சரவையின் உயர்மட்டக் குழு கூட்டம் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது. கொரோணா காரணமாக இந்தக் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறுகிறது. இப்படி வீடியோ கான்பரன்ஸ் மூலம் அமைச்சரவைக் குழு கூட்டம் நடைபெறுவதும் சுதந்திர இந்தியாவில் இதுவே முதல முறையாகும். இந்தக் கூட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் பிரதமர் மோடி விரிவான ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.

 

தொடர்ந்து, நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டமும் நடைபெற உள்ளது. ஊரடங்கு உத்தரவுக்குப் பின் முதல் முறையாக கூடும் மத்திய அமைச்சரவைக் கூட்டமும் வீடியோ கான்பரன்ஸ் மூலமே நடைபெறுகிறது. இதில், ஊரடங்கு உத்தரவை ஏப் 14-ந் தேதிக்கு பிறகு தளர்த்துவதா? அல்லது மேலும் நீட்டிப்பதா என்பது குறித்து முக்கிய முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.இந்நிலையில் கொரோனா தொடர்பாக விவாதிக்க நாளை மறுதினம் , அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது .


Leave a Reply