தமிழகத்தில் கொரோனாவிற்கு 2-வது பலி..! விழுப்புரத்தைச் சேர்ந்த பள்ளி தலைமையாசிரியர் உயிரிழப்பு!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். சிகிச்சையில் இருந்த விழுப்புரத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் பலியான நிலையில் உயிரிழப்பு 2 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல், கடந்த 4 நாட்களாக வேகமாக அதிகரித்து வருகிறது. இன்று இந்த பாதிப்பு எண்ணிக்கை 3024 ஆகவும், பலி எண்ணிக்கை 86 ஆகவும் உயர்ந்துள்ளது. உலக அளவிலோ உயிரிழப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இத்தாலியில் மட்டும் பலி எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் கடந்த இரு தினங்களாக அந்நாட்டில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. ஆனால் ஸ்பெயின், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலோ கொரோணா வைரஸ் தாண்டவமாடி பலி எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அமெரிக்காவில், இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 1480 பேர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து 411 ஆக உயர்ந்துள்ளது. 13 நாட்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த 55 வயது நபர் இறந்த நிலையில், இன்று விழுப்புரத்தைச் சேர்ந்த ஒருவரும் பலியாகியுள்ளதால் பலி எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.
இன்று பலியானவர் விழுப்புரத்தில் நடுநிலைப்பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ஆவார். 51 வயதான இவர், டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த பிறகு, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். அவருடைய உடலும் மத சம்பிரதாயப்படி விழுப்புரத்தில் அடக்கம் செய்யப்பட்டது.






