அம்மா உணவகத்தில் இட்லி, பொங்கல் ருசித்த முதல்வர் எடப்பாடி..! எவ்வளவு பேர் வந்தாலும் உணவு கிடைக்கும் என அறிவிப்பு!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : Arrangement


சென்னையில் அம்மா உணவகங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது அங்கு வழங்கப்படும் உணவின் தரத்தை சோதித்த முதல்வர், இட்லி ,பொங்கலை ருசித்து சாப்பிட்டு நன்றாகவும் ருசியாகவும் இருப்பதாக பாராட்டினார்.

 

கொரோனா முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், சென்னையில் உணவகங்களை நம்பியே இருந்த சாமான்யர்கள், சென்னையில் தங்கி வேலை பார்க்கும் இளைஞர்கள் பலர் உணவு கிடைக்காமல் தத்தளித்து வருவதால், அம்மா உணவகங்களில் 3 வேளையும் மலிவு விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

 

இந்த அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவின் தரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீர் ஆய்வு நடத்தி சோதனை நடத்தினார். பட்டினப்பாக்கம், சாந்தோம், கலங்கரை விளக்கம் ஆகிய இடங்களில் உள்ள அம்மா உணவகங்களை முதல்வர் பார்வையிட்டார். சாந்தோம் அம்மா உணவகத்தில், இட்லி மற்றும் பொங்கலை ருசித்து சாப்பிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி,நலிவுற்ற மக்களுக்காக கொண்டுவரப்பட்ட உன்னதத் திட்டம் தான் அம்மா உணவகம். எத்தனை பேர் வந்தாலும் அம்மா உணவகத்தில் உணவு வழங்க அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற உணவகங்கள் அடைக்கப்பட்டுள்ளதால் சென்னையில் தினமும் 4.5 லட்சம் பேருக்கு மலிவு விலையில் உணவு வழங்கப்படுகிறது. பார்சலும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

ஊரடங்கு உத்தரவால் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை. கொரோனா வைரஸ் பிரச்னை உலகம் முழுவதும் உள்ள பிரச்சனை. தமிழகத்தில் இதுவரை 124 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் தாமாக முன்வந்து சிகிச்சைக்கு ஒத்துழைக்க வேண்டும்.

 

ஒவ்வொரு மக்களின் உயிரும் அரசுக்கு முக்கியம்.அதனாலேயே தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், இதனை உணராமல் மக்கள் வெளியே வருவது வருத்தம் அளிக்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவலை தெரிவித்தார்.


Leave a Reply