கொளுத்தும் வெயிலில் நடைபயணமாக சென்று கொரோனா வைரஸ் விழிப்புணர்வு.குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவி அசத்தல் !!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


உலக நாடுகளில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது.இதனால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.இதனை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொண்டு வருகின்றன.

 

இந்நிலையில் கோவை மாவட்டம் அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கீதா தங்கராஜ் அதிகாலை முதலே கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தொடர்ந்து பணிகள் மேற்கொண்டு வருகிறார்.

 

அதன் ஒரு பகுதியாக ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து குன்னத்தூர் ஊராட்சிக்குட்பட்ட மாணிக்கம்பாளையம்,குன்னத்தூர் காலனி,நாரணாபுரம் உள்ளிட்ட 9 வார்டுகளிலும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நடை பயணமாக சென்று அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.தொடர்ந்து அந்த பகுதியில் இருந்து நகர்புற பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் தினக்கூலி மக்களுக்கு அனைவரது கைகளிலும் கிருமி நாசினி திரவம் வழங்கி வருகிறார்.

மேலும்,கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சோப்பு போட்டு கைகளை பலமுறை கழுவ வேண்டும் என்று எடுத்துக் கூறப்பட்டதுடன், அதற்கான செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.அதேபோல அந்த பகுதிக்கு வந்து செல்லும் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி கைகளை சுத்தமாக வைப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு செய்தனர்.

 

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் கீதா தங்கராஜ் கூறுகையில், இந்த ஊராட்சிக்கு உட்பட்ட சுற்றுப்புற பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக இந்த பணிகளை மேற்கொள்வதாகவும்,இது போன்று ஊரும்,ஊர் மக்களும் சுத்தமாக இருப்பதால் கொரோனாவை விரட்ட முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

 

பிரச்சாரத்தின் போது சமூக ஆர்வலர் தங்கராஜ்,துணைத்தலைவர் மூர்த்தி,வார்டு உறுப்பினர்கள் நாகராஜ்,கவிதா,யமுனா தேவி,ஸ்ரீவித்யா,ராமலிங்கம்,கலா மற்றும் ஊராட்சி செயலர் அருண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply