நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு நிறைவேற்றப்பட்டது!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


2012 டிசம்பர் 16ஆம் தேதி ஒட்டுமொத்த இந்தியர்களையும் உணர்ச்சி கொந்தளிப்பில் ஆழ்த்தி அந்த கொடூர சம்பவம் அரங்கேறியது. தலைநகர் டெல்லியில் இருள் சூழ்ந்த இரவு வேளையில் ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 23 வயதான இளம் மருத்துவ மாணவி சிங்கப்பூர் வரை அழைத்து சென்று சிகிச்சை அளித்த போதிலும் அடுத்த 13 நாட்களிலேயே அவரின் உயிர் பிரிந்தது.

 

தைரியமான பெண் என பொருள்படும் வகையில் நிர்பயா என்று அழைக்கப்பட்ட அவருக்கு நேர்ந்த துயரம் ஒட்டுமொத்த பெண் சமூகத்தின் பாதுகாப்பு குறித்த பல கேள்விகளை எழுப்பியது. இவ்வழக்கில் முகேஷ், பவன் குப்தா, அக்ஷய்குமார், வினய் சர்மா பேருந்து ஓட்டுநர் ராம்சிங் இருவரையும் சேர்த்து 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே ஓட்டுநர் ராம்சிங் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். கூர்நோக்கு இல்லத்தில் மூன்று ஆண்டுகள் தண்டனைக்கு பின் அந்த பதினாறு வயது சிறுவனை நீதிமன்றம் விடுதலை செய்தது. பாலியல் வன்கொடுமை, கொலை, கடத்தல், வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் எஞ்சிய நால்வரை வைத்து நிர்பயா வழக்கு நகர்ந்தது.

 

பல்வேறு கட்டங்களாக நடந்த விசாரணைக்குப் பின் 2013 செப்டம்பரில் அதிரடி தீர்ப்பை வழங்கியது டெல்லி கீழமை நீதிமன்றம். நாடே உற்றுநோக்கும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது தான் அன்றைய பரபரப்பு செய்தி. அதனை ஏற்காத குற்றவாளிகள் தண்டனையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கில் குற்றவாளிகளின் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள் கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்து அதிர்ச்சி அளித்தது.

அதன்பின் உச்ச நீதிமன்றத்தை நாடிய நால்வரும் அங்கும் மேல்முறையீடு செய்தனர். ஆனால் குற்றவாளிகளை கைவிட்ட நீதிபதிகள் மேல்முறையீட்டு மனு மட்டுமல்லாமல் அதன்பின் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்தனர். உயிர்வாழும் பாதைக்கான ஒவ்வொரு கதவும் அடைக்கப்பட்டு கொண்டே வந்ததால் சட்டத்தில் தங்களுக்கு இருக்கும் வாய்ப்புகளை நான்கு குற்றவாளிகளும் பயன்படுத்த தொடங்கினர்.

 

தூக்கு தண்டனையை காலதாமதம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் குடியரசுத் தலைவரிடம் தனித்தனியே கருணை மனுக்களை அளிக்கத் தொடங்கினர். ஆனால் சட்டமும், நீதிபதியும் குற்றவாளிகளின் பக்கம் இருக்கவில்லை. கருணை மனுக்கள் அனைத்தையும் கருணை காட்டாமல் நிராகரித்தார் குடியரசுத் தலைவர்.தொடர்ந்து அத்தனை வழக்குகளையும் பாரபட்சமின்றி தள்ளுபடி செய்தனர்.

 

நீதிமன்றங்கள் குற்றவாளிகளின் இந்த நடவடிக்கைகளால் இவர்களின் தூக்கு தண்டனை காலத்தில் மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்டன. நீதி வாய்ப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் மார்ச் 20ஆம் தேதி நால்வருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்து முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம். இதையடுத்து டெல்லி திகார் சிறையில் இன்று அதிகாலை நால்வரும் தூக்கிலிடப்பட்டனர்.


Leave a Reply