கொரானா வைரஸ் உயிரிழப்பு..! சீனாவை முந்தியது இத்தாலி..! இந்தியாவில் பலி 5 ஆக உயர்வு!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : கோப்பு படம்


கொரானா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் பலியா.னோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள் பட்டியலில் சீனாவை பின்னுக்கு தள்ளி இத்தாலி முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், அங்கு உயிருக்கு போராடுவோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

 

கடந்தாண்டு டிசம்பரில் சீனாவில் பரவியது கொரானா வைரஸ்.கோவிட் -19 என இந்த வைரசுக்கு பெயர் சூட்டிய சீனா, இந்த வைரசால் 3 மாதங்களாக கடும் திண்டாட்டத்துக்கு ஆளாகியது. ராணுவ பலத்துடன் கடும் போராட்டத்துக்கு பின் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளது சீனா என்றே கூறலாம். இந்த வைரஸ் தாக்குதலால் சீனாவில் கொத்து கொத்தாக மடிந்தோர் எண்ணிக்கை 3245 ஆகும். இதனால் கொரானாவுக்கு உலக அளவில் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள் பட்டியலில் சீனா முதலிடம் வகித்தது. இப்போது கடந்த 2 நாட்களாக சீனாவில் உயிரிழப்பு இல்லை. புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.

சீனா இப்படி கொரானாவின் பிடியில் இருந்து மீண்டெழ , உலகின் வேறு பல நாடுகளும் இப்போது கொரானா வைரஸ் பாதிப்பால் அலறித் துடிக்கின்றன. இதில் ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரிட்டன் ஆகியவையும், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் உயிரிழப்பு வெகுவாக அதிகரித்து வருகிறது.

 

இதில் இத்தாலியின் நிலை தான் ரொம்ப மோசமாகியுள்ளது. நேற்று ஒரே நாளில் 495 பேர் உயிரிழக்க 2 வாரங்களில் மட்டும் இத்தாலியில் பலி எண்ணிக்கை 3405 ஆக உயர்ந்து சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது. சிகிச்சையில் உள்ளோரில் ஏராளமானோர் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் உச்சத்தை தொடும் எனத் தெரிகிறது.

ஈரானில் 1284 பேரும், ஸ்பெயினில் 831 பேரும் கொரானாவுக்கு உயிரிழந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரானா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கையும் 2.5 லட்சமாக உயர்ந்துள்ளது.

 

இந்தியாவிலும் நேற்று வரை பலி எண்ணிக்கை 4 ஆகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 171 ஆக இருந்தது. ஆனால் இன்று ஜெய்ப்பூரில் இத்தாலியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழக்க எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் 206 ஆக அதிகரித்துள்ளது.


Leave a Reply