--- --:--:-- --

மகளிர் தினத்திற்கு பிரதமர் மோடி அளிக்கும் பரிசு

14

சமூக வலைதளங்களில் இருந்து விலகுவது குறித்து திட்டமிட்டு இருப்பதாக கூறிய பிரதமர் மோடி அதற்கான பின்னணி குறித்து இன்று விளக்கியுள்ளார். இது பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும் என அவர் கூறியுள்ளார்.

 

பிரதமராக பதவியேற்ற பின்னர் சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டு உள்ளார் நரேந்திர மோடி. சர்வதேச அளவில் சமூக வலைதளங்களில் அதிகம் பேர் பின்பற்றும் தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

 

இந்நிலையில் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவது குறித்து தாம் தீவிரமாக யோசித்து வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டு இருந்தார். இது பாரதிய ஜனதா கட்சியினருக்கும், அவரை பின்தொடர்வோருக்கும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

மேலும் சமூக வலைதளங்களில் இருந்து வெளியேற வேண்டாம் எனவும் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் அவர் தனது பதிப்புக்கான பின்னணியை உடைத்துள்ளார். அதாவது பெண்கள் தினத்தன்று தனது சமூக வலைத்தள கணக்குகளை பெண்கள் நிர்வகிக்கலாம் என பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

அதன்படி தனது வாழ்க்கையாலும், பணிகளாலும் பிறருக்கு முன்மாதிரியாக திகழும் பெண்கள் வசம் சமூகவலைதள கணக்குகளை ஒப்படைக்க தயார் என அவர் தெரிவித்துள்ளார். அதற்காக மிகச்சிறந்த சாதனை புரிந்த பெண்கள் குறித்து ஷி இன்ஸ்பைர் அஸ் ஹேஸ்டேக்கில் பதிவிடலாம் என குறிப்பிட்ட பிரதமர் மோடி இது பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும் எனவும் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

மேலும் ஷி இன்ஸ்பைர் அஸ் என்ற ஹேஸ் டேக்கில் ட்விட்டர் மட்டுமில்லாமல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் தங்கள் வீடியோக்களை யூடியூப் பக்கத்திலும் பதிவிடலாம் என கூறியுள்ளார். இதிலிருந்து தேர்வு செய்யப்படுவோர்களிடம் தனது சமூக வலைத்தள கணக்குகள் ஒப்படைக்கப்படும் என பிரதமர் மோடி தனது பதிவில் கூறியுள்ளார்.

 

இதன் மூலம் தங்களின் எண்ணங்களையும் யோசனைகளையும் உலகுக்கு தெரியப்படுத்துங்கள் என பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon