சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் வளாகத்திற்குள் ரோடுகள் மிகவும் மோசமான நிலையில் சிதைந்து போய் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மானாமதுரை சிப்காட் வளாகத்தில் தற்போது நவீன அரிசி ஆலை, ஜிப் ஆலை, மாத்திரை கம்பெனி, கடற்பாசி ஆலை உட்பட 15 க்கும் மேற்பட்ட ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளுக்கு கனரக வாகனங்கள் செல்லும் வகையில், கடந்த சில ஆண்டுக்கு முன் ரோடுகள் புதுப்பிக்கப்பட்டன.
தற்போது பல இடங்களில் அந்த ரோடு சிதைந்து போய் மிகவும் மோசமான நிலையில் குண்டும்,குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் நீண்ட துாரம் சென்று வருவதால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தற்போது அறுவடை காலம் இருப்பதால், நவீன அரிசி ஆலைகளுக்கு லாரிகளில் நெல் மூடைகளை ஏற்றி வருகின்றனர். இதனால் அரிசி ஆலைக்கு செல்லும் ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சிப்காட் நிறுவனம் பொதுமக்களின் நலன் கருதி சிதைந்த ரோடுகளை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.