நாசிக்கில் இருந்து கல்யாண் நோக்கி பயணிகளுடன் சென்ற அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று மாலைகாண்டீயாலோ சாலையில் மேசிப்பாடா எனும் இடத்தில் நேற்று மாலை வந்த போது முன்பக்க சக்கரத்தில் டயார் வெடித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கட்டுப்பாட்டை இழந்து ஓடிய அந்த பேருந்து அவ்வழியே வந்த ஆட்டோவுடன் பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது. பின்னர் பேருந்தும், ஆட்டோவும் சாலையில் இருந்த கிணற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின.
இதுகுறித்த தகவலின் பேரில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பேருந்து மற்றும் ஆட்டோ ஆகியவற்றில் நீண்ட நேரம் போராடி கிரேன் மூலம் அவர்கள் வெளியே கொண்டு வந்தனர்.
இந்த பயங்கர விபத்தில் கிணற்றில் உள்ள தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி பலத்த காயம் அடைந்தும் 23 பேர் உயிரிழந்தனர். மேலும் 31 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது. காயமடைந்தோருக்கு இலவச சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது.