1971-ல அப்படி எதுவுமே நடக்கல…! ரஜினி பேசாமல் இருப்பது தான் நல்லது..! அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!!
1971-ல் நடைபெறாத ஒன்றைப் பேசி மக்களை திசை திருப்பப் பார்க்கிறார் ரஜினி என்றும், மலிவாக பேசி ஆதாயம் தேடுவதற்குப் பதில் வாயை மூடிக் கொண்டு மெளனியாக இருப்பதே அவருக்கு நல்லது என அமைச்சர் ஜெயகுமார் காட்டமாக தெரிவித்துள்ளார்.
1971-ல் பெரியார் தலைமையில் சேலத்தில் நடந்த தி.க.மாநாட்டில் சீதை, ராமர் சிலைகள் அவமானப்படுத்தப்பட்டதாக கூறிய ரஜினிக்கு எதிர்ப்பு கிளம்பியது. போராட்டங்களும் வெடித்தன.ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் குரல்கள் எழுந்தன. ஆனால் இதோ பத்திரிகை ஆதாரம், இதை வைத்துத்தான் பெரியார் குறித்து பேசினேன்.
எனவே மன்னிப்பு கேட்க மாட்டேன் என பட்டவர்த்தமாக ரஜினி கூறி விட்டார். ரஜினியின் இந்தப் பதிலால் சர்ச்சை மேலும் அதிகரித்து, கடந்த 2 நாட்களாக அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. பாஜக மற்றும் இந்து அமைப்பினர் ரஜினியின் கருத்துக்கு முழு மூச்சாக ஆதரவுக் குரல் கொடுத்து வருகின்றனர்.

ஆனால் பெரியார், அண்ணாவின் கொள்கைப்படி கட்சி நடத்துவதாகக் கூறும் தமிழகத்தின் பிரதான இரு கட்சிகளான திமுகவும், அதிமுகவும் இந்தப் பிரச்னையில் ரஜினிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதை தவிர்த்து வருகின்றன என்றே கூறலாம். ரஜினி அரசியலுக்கு வரப்போவது உறுதி என்று கூறி வருகிறார்.
இந்த நேரத்தில் அவரை கடுமையாக விமர்சித்தால், அவரை உசுப்பேற்றி விளம்பரம் தேடிக் கொடுத்தது போலாகிவிடும் என இரு கட்சிகளுமே கருதுவதாக தெரிகிறது. ரஜினியும் அதை எதிர் பார்த்தே இப்படி காய் நகர்த்துகிறார் என்ற சந்தேகமும் உள்ளது.
ஆனாலும் பெரியாரைப் பற்றி ரஜினி பேசியதற்கு பதில் கொடுக்காமல் இருந்தாலும் தப்பாகி விடுமே? அதனால் ரஜினியின் கருத்துக்கு எதிராக குரல் கொடுப்பது போல், அவருக்கு அட்வைஸ்களை தான் திமுக, அதிமுக தரப்பில் முன்வைத்து வருகின்றனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், பெரியார் பற்றி பேசும் முன் நண்பர் ரஜினி நன்கு யோசித்து சிந்தித்து பேச வேண்டும் என்றார். துணை முதல்வர் ஓ.பி.எஸ். கூறுகையில், பெரியார் பற்றி முழுமையாக படித்து ஆராய்ந்த பின்பே கருத்து கூற வேண்டும் என ரஜினிக்கு பாடம் நடத்துவது போல் கூறியிருந்தார்.

இது போல் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் நேற்று கூறுகையில், பெரியார் கூறியதை மறுக்க முடியாது; ஆனால் மறக்க வேண்டியது எனக் கூறி விட்டு மறக்கவேண்டிய சம்பவத்தை ஏன் மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டும் என ரஜினியை குறை கூறியிருந்தார். இன்று கொஞ்சம் ஒரு படி மேலே போய், துக்ளக் பத்திரிகையில் வந்த செய்திக்கு அவுட்லுக் பத்திரிகையை எப்படி ஆதாரமாக காட்டலாம்? ரஜினி கூறியது போல 1971-ல் அப்படி எதுவுமே நடக்கல.
தேவையில்லாத ஒன்றை பேசி மலிவான அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கக் கூடாது. மக்களையும் திசை திருப்ப பார்க்கக் கூடாது. இப்படி தேவையில்லாம பேசறதுக்கு பதிலாக வாய் மூடி மௌனியாக இருக்கலாம். எத்தனை ரஜினி வந்தாலும் அதிமுகவை அசைத்துக் கூட பார்க்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் கொஞ்சம் காட்டமாகவே பதிலடி கொடுத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




