ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறத் தேவையில்லை என மத்திய அரசு திடீரென உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் மீண்டும் கொந்தளிப்பான சூழல் உருவாகியுள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் , ஷேல் கேஸ் என பல்வேறு திட்டங்களை செயல் படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டியது. ஆனால் இந்தத் திட்டங்களால் சோலைவனமாக விளங்கும் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் எனக் கூறி அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பலகட்ட போராட்டங்களும் வெடித்தன. சுற்றுச்சூழல் பாதிப்பை காட்டி வழக்குகளும் தொடரப்பட்டன.இதனால் இத்திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தியே தீருவது என மத்திய அரசு கங்கணம் கட்டி உள்ளது போல் தெரிகிறது. தற்போது ஹெட்ரோகார்பன் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் துறையின் தற்போது அனுமதி பெறத் தேவையில்லை என மத்திய அரசு திடீரென புதிய உத்தரவிட்டுள்ளது. இதனால் இத்திட்டம் டெல்டா மாவட்டங்களில் மீண்டும் தலையெடுக்கும் என்பதால் டெல்டா பகுதி மக்கள் எதிர்ப்பு காட்டி கொந்தளிக்கத் தொடங்கியுள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழக அரசு இத்திட்டத்திற்கு எதிராக தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் வகையில், இன்று கூடும் அமைச்சரவைக் கூட்டத்தில், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவோ, எதிர்ப்பை மீறி ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த முயன்றால் தமிழக மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இது போல் பல்வேறு கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.






