--- --:--:-- --

நகை வியாபாரியிடம் 4 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த கும்பல் கைது

1

சென்னை யானைகவுனியில் நகை வியாபாரிகளிடம் 4 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச்சென்ற ஈரானிய கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திராவை சேர்ந்த நகை கடை ஊழியர் தினேஷ் என்பவர் கடந்த 10ஆம் தேதி தங்கம் வாங்குவதற்காக சென்னை வந்துள்ளார்.

 

சவுகார்பேட்டையில் ஒரு கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தை வாங்கிக் கொண்டு காரை நோக்கி நடந்து சென்ற அவரை டெல்லி காவல்துறையினர் எனக்கூறி வழிமறித்த நான்கு பேர் அவரிடம் இருந்த தங்கத்தை கொள்ளையடித்து சென்றனர். புகாரின்பேரில் யானைகவுனி காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

 

இதில் கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்கள் கோவா சென்றதை அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்தனர். ஆனால் அதற்குள்ளாகவே கொள்ளையர்கள் ரயில் மூலம் மத்திய பிரதேசத்திற்கு தப்பியுள்ளனர். உடனடியாக அம்மாநில ரயில்வே துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

அதன்படி கௌடா ரயில் நிலையத்தில் 4 கொள்ளையர்களையும் ரயில்வே காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். கௌடா விரைந்த தமிழக காவல்துறையினர் நால்வரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் நான்குபேரும் ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும், மத்தியபிரதேசத்தில் அகதிகளாக குடியேறி திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon