இந்தியா மற்றும் ஆஸி., இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி பெங்களூரூவில் இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வெல்லும் அணிக்கே கோப்பை என்பதால் இரு அணிகளும் கடும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. மும்பையில் நடந்த முதலாவது போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா. இதற்கு பழி தீர்க்கும் வகையில் ராஜ்கோட்டில் நடந்த 2-வது போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.,யை வெற்றி கண்டது இந்தியா.
ராஜ்கோட் போட்டியில் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான ரோகித், லோகேஷ், ஷிகர் தவான், கேப்டன் கோஹ்லி ஆகியோர் ரன் குவிப்பில் ஈடுபட்டதால் இந்திய அணி 340 ரன்களை குவித்ததே வெற்றிக்கு காரணம். அதே போல் பந்து வீச்சிலும் இந்திய அணி எழுச்சி பெற்றுள்ளது.
இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என தொடரில் சமனில் உள்ளன. எனவே தொடரை வென்று கோப்பையை கைப்பற்ற இன்றைய போட்டியில் இரு அணிகளும் கடும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. ஆஸி., அணியில் வார்னர், பிஞ்ச், ஸ்மித், லபுசோன் ஆகியோர் பேட்டிங் வரிசையில் கலக்கினாலும், வேகத்தில் பும்ரா மிரட்டத் தொடங்கியுள்ளார்.
இதனால் கடந்த ராஜ்கோட் போட்டி போல் வேகத்தில் ஷமி, நவ்தீப் சைனி ஆகியோரும் சிறப்பாக பந்து வீசி ஆஸி.,யை மிரளச் செய்வார்கள் என நம்பலாம். இரு அணியிலும் கடந்த போட்டியில் பங்கேற்ற வீரர்களே இன்றைய போட்டியிலும் இடம் பெறுகின்றனர். இதனால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்றே எதிர்பார்க்கலாம்.






