நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த, 2 குழந்தைகளுக்கு மேல் கூடாது என்ற சட்டத்தை இயற்ற வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
மத்தியில் பாஜக அரசு 2-வது முறையாக ஆட்சிக்கு வந்த பின்னர், அதன் தாய்க் கழகமான ஆர்.எஸ்.எஸ்.சின் அஜென்டாக்களை ஒவ்வொன்றாக வரிசையாக நிறைவேற்றுவதில் முனைப்பாகிவிட்டது. இதில் ஒரே நாடு, ஒரே சட்டம் என்பது தான் ஆர்.எஸ்.எஸ்.சின் தாரக மந்திரம் .
அதன்படி, இஸ்லாமியர் ஒருவர் தம் மனைவியை மூன்று முறை தலாக் சொல்லி விவாக ரத்து செய்யும் முறைக்கு முடிவு கட்டும் வகையில் முத்தலாக் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து சுதந்திரம் பெற்ற காலம் முதல் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அரசியல் அமைப்பு சட்டப் பிரிவு 370-ம் நீக்கப்பட்டது. தொடர்ந்து சிஏஏ எனும் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் கடும் எதிர்ப்புகள் இருந்தாலும் பிடிவாதமாக நிறைவேற்றி விட்டது பாஜக அரசு.
அதே போல்,, அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீருவது என்பது தான் ஆர்.எஸ்.எஸ்.சின் பன்னெடுங்கால கொள்கையாக இருந்தது. அந்தப் பிரச்னையும் பல்வேறு சட்டச் சிக்கல்களை, வழக்குகளை கடந்து சாதகமாகி விட்டது. சர்ச்சைக்குரிய இடம் என கூறப்பட்ட இடத்திலேயே ராமர் கோயில் கட்டலாம் என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டது.
இந்நிலையில், நாட்டில் மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர வேண்டியது அவசியம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளது அடுத்த பரபரப்புக்கு வித்திட்டுள்ளது. உ. பி.மாநிலம் மொரதாபாத்தில் நடைபெற்ற ஆர்.எஸ். எஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தான் மோகன் பகவத் இவ்வாறு கூறியுள்ளார்.
வளர்ந்து வரும் நாடான நமது நாட்டில், கட்டுப்பாடற்ற மக்கள் தொகை பெருக்கம் நாட்டின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதல்ல. எனவே மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது காலத்தின் தேவை என உணர்கிறோம். குடும்பத்தில் இரு குழந்தைகளுக்கு மேல் கூடாது என்ற கட்டுப்பாட்டை கொண்டு வர நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர வேண்டும்.
இந்தச் சட்டம் எந்தவொரு குறிப்பிட்ட மதத்துடனும் எந்த தொடர்பும் இல்லாத வகையில் அனைவருக்கும் பொருந்துவதாக இருக்க வேண்டும் என மோகன் பகவத் கூறியுள்ளது நாட்டில் அடுத்து ஒரு சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், 45 ஆண்டுகளுக்கு முன்னர் எமர்ஜென்சி காலத்தில் பிரதமர் இந்திரா காந்தி இது போன்று ஒரு அவசரச் சட்டம் கொண்டு வந்தார். மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த நாம் இருவர், நமக்கு இருவர் என்ற கோஷத்துடன் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை கொண்டு வந்தார். வட மாநிலங்களில் இதனை கட்டாயமாக்கிய போது பெரும் எதிர்ப்புகள் எழுந்து பின்னர் வெற்றுக் கோஷமாகவே போய்விட்டது. இப்போது ஆர்.எஸ்.எஸ். இதனை வலியுறுத்துகிறது என்றால் அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.