கல்வி கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஒரு மாதத்திற்கு மேலாக ஜே என் யூ பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி 5ஆம் தேதி டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்த மர்ம நபர்கள் மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த தாக்குதலுக்கு ரக்ஷா தளம் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அரசியல் தலைவர்கள், பாலிவுட் பிரபலங்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் கடந்த 7ஆம் தேதி பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து நடிகை தீபிகா படுகோன் ஆதரவையும், ஆறுதலையும் கூறினார். தீபிகா நடிப்பில் வெளியாகியுள்ள சப்பாக் படத்தை விளம்பரப்படுத்த தான் அவர் மாணவர்களை சந்தித்ததாக வலதுசாரி அமைப்புகளால் விமர்சிக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக சப்பாக் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதனால் பாய்காட் சப்பாக் என்று அதே சமயத்தில் இதற்கு போட்டியாக சப்போர்ட் தீபிகா என்ற ஹேஸ்டேக்கையும் தீபிகா ரசிகர்கள் ட்ரண்ட் செய்தனர். இந்த விவகாரம் பேசு பொருளாக மாறிய நிலையில் டிக்கட்டை கேன்சல் செய்து விட்டதாக சிலர் புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர். அந்த பதிவுக்கு பலரும் பாராட்டுகளையும் தெரிவித்து வந்தனர்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் பல நூற்றுக்கணக்கானோர் செய்துள்ள இந்த பதிவுகள் அனைத்திலும் ஒரே புகைப்படம் இடம் பெற்றுள்ளது என்பதுதான். டிக்கட்டை கேன்சல் செய்ததாக கூறியுள்ள அனைத்து புகைப்படங்களும் ஒரே திரையரங்கில் ஒரே குறிப்பிட்ட இருக்கைகளுக்கான டிக்கெட் இடம்பெற்றுள்ளது.
புகைப்படத்தை வெளியிட்ட அவர்கள் அனைவரும் தங்கள் டிக்கட்டை கேன்சல் செய்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த விஷயம் சமூகவலைதளங்களில் பேசு பொருளாக மாறி கேலி கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது. இது போன்ற முட்டாள்தனமான செய்கைகளால் தீபிகாவை விடவும், எதிர்ப்பாளர்கள் தான் சப்பாக் படத்திற்கு அதிக விளம்பரம் செய்து வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தின் எதிரொலியாக தீபிகாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் ஆளும் மாநிலமான ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநில அரசுகள் சப்பாக் திரைப் படத்திற்கு வரிவிலக்கு அளித்துள்ளனர். அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களை தாண்டி நாட்டின் பிரதான எதிர்க்கட்சியே தீபிகாவுக்கு ஆதரவளித்து இருப்பதாக கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.






