அலங்காநல்லூர் “ஐல்லிக்கட்டு” ஏற்பாடுகள் தீவிரம்..! உடல் தகுதித் தேர்வுக்கு குவிந்த மாடுபிடி வீரர்கள்!!

ஜல்லிக்கட்டு.. மல்லுக்கட்டு…தமிழகத்தில் தைப்பொங்கல் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு தான். தை பிறந்தாலே தமிழகத்தில் ஜல்லிக்கட்டும் களைகட்டி விடும்.

 

திமிலை சிலுப்பியபடி பிடித்துப் பார் என துள்ளி வரும் காளைகளை அடக்க, இளம் காளையர்களான மாடுபிடி வீரர்களும் களத்தில் தீரத்துடன் இறங்குவர்.

 

தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும், மதுரையைச் சுற்றியுள்ள அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தி பெற்றது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான இந்த ஜல்லிக்கட்டுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தடை வந்தது. இதனால் தமிழகமே கொதித்தெழுந்தது சென்னை மெரினாவில் கடல் அலையை மறைக்கும் அளவுக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் அலைகடலென திரண்டனர்.

 

இரவு, பகலாக ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுத்தது சரித்திர சாதனையானது. இது மட்டுமன்றி உலகம் முழுதும் வசிக்கும் தமிழர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இந்த எழுச்சிமிகு போராட்டங்களின் விளைவாக ஜல்லிக்கட்டுக்கான தடை விலகியது. ஜல்லிக்கட்டு மீதான ஆர்வமும் இளைஞர்களிடம் அதிகரித்தது.

இந்நிலையில், இந் தாண்டும் தைப்பொங்கல் நெருங்கும் நிலையில், ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகளில் மதுரை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது. மாவட்ட ஆட்சியர் வினய், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கான பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

 

பொங்கல் நாளான ஜனவரி 15-ல் அவனியாபுரம், மறுநாள் பாலமேடு, ஜனவரி 17-ம் தேதி அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் நிலையில் இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், காளைகளை அடக்கும் வீரர்களை முன்பதிவு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முன்பதிவு செய்துள்ள வீரர்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கும் பணி இன்று நடைபெற்றது. இதற்காக சுமார் 1000 -த்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிகாலை முதலே குவிந்தனர்.

 

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் 21 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், 60 கிலோ எடைக்கு மேற்பட்டவர்களாகவும், உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply