டெல்லியில் உள்ள புகழ் பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள், இரவு நேரத்தில் முகமூடி அணிந்தபடி புகுந்த மர்மக் கும்பல் மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.
டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.புகழ் பெற்ற இந்தப் பல்கலைக்கழகத்தில் படிப்பதையே மாணவர்கள் பலர் பெருமையாக கருதுவதுண்டு. இங்கு கட்டணமும் மிகக் குறைவு .
இந்தப் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் மாணவர் சங்கத் தேர்தல், நமது அரசியல் கட்சியினரை விஞ்சும் வகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விடும். இடதுசாரி அமைப்பு மற்றும் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி இடையே தான் எப்போதும் போட்டி நிலவினாலும் வெற்றி பெறுவது இடதுசாரி மாணவர் அமைப்பினர் தான்.
இதனால் பல்கலையில் இந்த இரு மாணவர் அமைப்புகள் இடையே அடிக்கடி சண்டை, சச்சரவு என எப்போதும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கும். இந்நிலையில் இந்த ஆண்டு படிப்புக் கட்டணம், விடுதிக் கட்டணத்தை எக்கச்சக்கமாக பல்கலை நிர்வாகம் உயர்த்தியது.
இதை எதிர்த்து இடதுசாரி மாணவர் அமைப்பின் தலைவர் அய்ஷி கோஷ் தலைமையில் மாணவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 70 நாட்களைத் தாண்டி மாணவர்கள் போராட்டம் தொடரும் நிலையில், பாஜகவின் ஏபிவிபி மாணவர் அமைப்பினர் போராட்டத்தை கைவிடுமாறு நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். பல்கலை நிர்வாகமும் ஏபிவிபி அமைப்பினரை தூண்டி விடுவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தான் நேற்றிரவு கையில் நீண்ட கம்பு, தடி,ஹாக்கி மட்டைகளுடன் முகத்தை மூடியபடி, 30 பேர் கொண்ட கும்பல் ஒன்று பல்கலை வளாகத்திற்குள் நுழைந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக தாக்குதல் தொடுத்தனர்.
இதில் மாணவிகளும் தப்பவில்லை. மாணவிகள் விடுதிக்குள் நுழைந்து அடித்து நொறுக்கியதுடன் அநாகரீகமாகவும் நடந்து வன்முறை வெறியாட்டம் நடத்தியது மர்மக் கும்பல் .இதில் மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ் உள்ளிட்ட பலருக்கும் மண்டை உடைந்து ரத்தக் காயத்துடன் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் பல்கலை பேராசிரியர்கள் 12 பேரும் காயமடைந்தனர்.
இவ்வளவு கொடூர தாக்குதல் நடத்தியது ஏபிவிபி அமைப்பு மாணவர்களும், பல்கலைக்கழகத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்ட பாதுகாப்பு ஊழியர்களும் தான் என்று கூறப்படும் நிலையில், இந்த வன்முறையை தடுக்க வேண்டிய டெல்லி போலீசாரும் கைகட்டி வேடிக்கை பார்த்த அவலமும் அரங்கேறியுள்ளது..
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், பிரியங்கா காந்தி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், மே.வங்க முதல்வர் மம்தா, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இத்தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, புனே உள்ளிட்ட பல நகரங்களில் இன்று மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.