உள்ளாட்சித் தேர்தல்: 2-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது..! ஜன. 2-ந் தேதி முடிவு தெரியும்!!

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, இன்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. முதற்கட்டத்தில் பதிவானதை விட வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக கடந்த 27-ந் தேதி 27 மாவட்டங்களில் உள்ள 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.இதில் 76. 19 % பேர் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

 

இந்நிலையில், 2-ம் கட்டமாக, 156 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 46 ஆயிரம் பதவிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

 

வாக்குப்பதிவு பெரும்பாலும் அமைதியாக நடைபெற்றது. ஒரு சில இடங்களில் ஓட்டுச் சீட்டில் பெயர் மாறி விட்டது, சின்னத்தை காணவில்லை என்பது போன்ற வழக்கமான புகார்களும், சில இடங்களில் சிறு சிறு சலப்புகளும் பஞ்சமில்லாமல் அரங்கேறி , மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. முதற்கட்ட தேர்தலில் 76. 19% வாக்குகள் பதிவான நிலையில், இன்று நடந்த 2-ம் கட்டத் தேர்தலில் அதைவிட கூடுதலாக வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இரு கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், வரும் 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் முடிவை அறிய 2 நாட்கள் உள்ளதால், திக் திக் என்ற மன நிலையில் வேட்பாளர்கள் பலரும் கூட்டல், கழித்தல் கணக்குப் போட்டு வருகின்றனர்.


Leave a Reply