குடியுரிமை திருத்த சட்டம் ஏழைகளின் மீதான தாக்குதல் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் இந்த சட்டத்தால் யாருடைய குடியுரிமையாவது பறிக்கப்பட்டு உள்ளதா என்பதை நிரூபிக்க தயாரா என ராகுல் காந்திக்கு சவால் விடுத்துள்ளார் அமித்ஷா. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தேசம் தழுவிய அளவில் நடைபெற்று வந்த போராட்டங்கள் கடந்த சில தினங்களாக தணிந்து இருந்தது.
இந்த நிலையில் மீண்டும் நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தது. டெல்லியில் ஜும்மா மசூதியில் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடைபெற்றதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடத்த ஜும்மா மசூதிக்கு வந்த இஸ்லாமியர்கள் மசூதிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை இந்த போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதே போன்று ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற போராட்டத்தில் பிரம்மாண்ட தேசியக் கொடியை தாங்கியபடி மக்கள் ஊர்வலமாக சென்றனர். மேலும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தின்போது அஜ்மீர் தர்கா இமானின் உருவபொம்மை தீயிட்டு எரிக்கப்பட்டது. குடியுரிமை சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இல்லை என இமாம் கருத்து தெரிவித்ததால் அவரை கண்டித்து ஏராளமான இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோன்று மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் உத்திரப்பிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மீண்டும் போராட்டம் எழாமலிருக்க முன்னெச்சரிக்கையாக 21 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டது. அதோடு மாநில முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இதனிடையே தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு இரண்டும் ஏழை மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூர் நகரில் பழங்குடியின மக்களில் மூன்று நாட்கள் நடன திருவிழாவை ராகுல் காந்தி தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர் நாட்டிலுள்ள அனைத்து மதங்கள், சாதிகளை சேர்ந்த மக்களை ஒருங்கிணைத்து செல்லாமல் இந்திய பொருளாதாரத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியாது என கூறினார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் குடியுரிமை சட்ட விவகாரத்தில் வேண்டுமென்றே மக்களை தவறாக வழி நடத்துவதாக தெரிவித்துள்ளார்.
இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர் குடியுரிமை திருத்த சட்டத்தால் சிறுபான்மை மக்களின் குடியுரிமை பறிக்கப்படும் என திட்டமிட்டு வதந்தி பரப்புவதாக குற்றம்சாட்டினார்.






