தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழை நீடிக்கும்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வரும் தருணம் எட்டியிருக்கும் நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது.

 

கடலூர், திருவாரூர், புதுச்சேரியில் பல இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. நாகையில் நீண்ட நேரம் கனமழை கொட்டியது. இந்நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

தென் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக நாகையில் 14 சென்டி மீட்டர் மழையும், காரைக்காலில் 13 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.


Leave a Reply