“கச்சேரி நடுவிலேயே திடீரென மாயமானார்” – பிரபல’லட்சுமண் ஸ்ருதி’ இசைக்குழு உரிமையாளர் ராமன் தற்கொலை!!
பிரபல இசைக்குழுவான லட்சுமண் ஸ்ருதி ஆர்கெஸ்டிராவின் உரிமையாளரான ராமன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்னிசை ரசிகர்களையும், திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக கொடிகட்டிப் பறக்கும் இன்னிசைக்குழு லட்சுமண் ஸ்ருதி ஆர்கெஸ்டிரா குழுவாகும். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தக் குழுவை, இரட்டையர்களான வட்சுமண் – ராமன் சகோதரர்கள் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தனர். இதில் ராமன் இக்குழுவின் உரிமையாளராகவும் , நிர்வாக இயக்குநராகவும் இருந்து வந்தார்.
தனக்கென தனி பாணி வகுத்து, இசை ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்ற லட்சுமண் ஸ்ருதி இசைக் குழுவுக்கு ஏக கிராக்கியும் கூட. திருமண விழாக்கள், தனியார் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் லட்சுமண் ஸ்ருதி இன்னிசைக்கச்சேரிக்கு ஏற்பாடு செய்வதை பலரும் பெருமையாக கருதுவதும் உண்டு. நேற்றிரவு சென்னை காமராஜர் அரங்கிலும் இக்குழுவின் இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. கச்சேரியை வழி நடத்திக் கொண்டிருந்த ராமன், திடீரென பாதியில் வெளியேறினார்.

இந்நிலையில், அடுத்த சிறிது நேரத்தில் ராமன், தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அசோக் நகரில் உள்ள வீட்டில் தனது அறையில் ராமன் நேற்றிரவு தூக்கில் தொங்கியதைக் கண்டு அவருடைய குடும்பத்தினர் அலறித் துடித்தனர். பின்னர் போலீசார், அவருடைய சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.ராமன் தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. எனவே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சுமண் ஸ்ருதி உரிமையாளர் ராமனின் திடீர் தற்கொலைச் சம்பவம் இன்னிசை ரசிகர்களை அதிர்ச்சியும், வேதனையும் அடையச் செய்துள்ளது. அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




