“உயிரே போனாலும் குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம்!” புதுச்சேரி முதல்வர் ஆவேசம்!!

ஆட்சி போனாலும் சரி.. உயிரே போனாலும் சரி.. குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆவேசமாக பேசியுள்ளார்.

 

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. சென்னையில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.

 

புதுச்சேரியில் சுதேசி மில் அருகே ஜமாஅத் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் பங்கேற்ற புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசுகையில், எங்கள் உயிரே போனாலும் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம். அதற்காக ஆட்சியே போனாலும் கவலைப்பட மாட்டோம்.எங்கள் பிணத்தின் மீது ஏறி நின்றாலும் கூட சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம். உயிரே போனாலும் சிறுபான்மை சமூகத்தினரைக் காக்கப் போராடுவோம் என முதல்வர் நாராயணசாமி ஆவேசமாக பேசினார்.

 

மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத்தை, தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தப் போவதில்லை என கேரளா, மே.வங்கம், பஞ்சாப் ஆகிய மாநில மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்தனர். அந்த வரிசையில் புதுச்சேரியிலும் இச்சட்டத்தை அமல்படுத்த மாட்டோம். அதற்காக ஆட்சி போனாலும் கவலை இல்லை என முதல்வர் நாராயணசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். இப்போது உயிரே போனாலும் அமல்படுத்த விடமாட்டோம் என அவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply