அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு கொல்லைப்புற வழியாக மத்திய அரசிடம் ஒப்படைக்கவும் அண்ணா பெயரை அகற்றவும் தான் அமைக்கப்பட்டுள்ளதோ என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் அவர் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கு மாநில அரசு குழு அமைத்தது, மத்திய அரசிடம் தாரை வார்ப்பதற்கான நடவடிக்கையோ என்ற சந்தேகம் எழுவதாக தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரில் உள்ள பல்கலைகழகத்தை அதிமுக கூறுபோட நினைப்பதாக குற்றம்சாட்டியுள்ள ஸ்டாலின் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தருகிறோம் எனக் கூறி தன் வசமாக்கிக் கொள்ள மத்திய அரசு தீவிரமாக செயல்படுவதாக கூறினார்.
உயர்கல்வி நிறுவனங்களை தரம் உயர்த்த வேண்டும் எனில் அந்த நிதியை நேரடியாக பல்கலைக்கழகத்திற்கு அளித்து தமிழக மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் செயல்படுத்தலாம் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து அளிப்பதால் 69 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து தெளிவான அறிவிப்பு வரவில்லை என்றும் தமிழக அரசின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து செயல்பட்டு கல்வியின் தரத்தை தொடர்ந்து உயர்த்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.