காஷ்மீரில் உணவில்லாமல் கஷ்டப்படும் கணவரை மீட்டு தரவேண்டும்

ஆப்பிள் சரக்கு ஏற்றி வருவதற்கு ஸ்ரீ நகர் மற்றும் லடாக் பகுதிக்கு சென்ற சுமார் 450 லாரிகளில் சென்ற தமிழக ஓட்டுநர்கள் கடந்த 15 நாட்களாக உணவின்றி அங்கு சிக்கி தவித்து வரும் நிலையில் 2 தமிழக ஓட்டுநர்கள் கடும் குளிரில் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

நாமக்கல், சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடந்த நவம்பர் 30ஆம் தேதியன்று சுமார் 500 சரக்கு லாரிகள் ஆப்பிள் லோடு ஏற்றுவதற்காக ஸ்ரீநகரில் உள்ள சோசியல் பகுதிக்கு சென்றுள்ளனர். கடந்த 7 ஆம் தேதியன்று லோடு ஏற்றி விட்டு திரும்பிய பொது ஸ்ரீ நகர் மற்றும் லடாக் பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

 

இதனால் அங்குள்ள ராணுவத்தினர் மற்றும் உள்ளூர் போலீசார் கனரக வாகனங்களை அனுமதிக்காமல் சுற்றுலா வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள இடத்தில் தமிழகத்தை சேர்ந்த 450 லாரிகள் கடந்த 15 நாட்களாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பதாகவும் நாமக்கல் அடுத்த பாய்ச்சலை பகுதியை சேர்ந்த ஓட்டுநர் செந்தில்குமார் தனது மனைவியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

 

மேலும் தங்களை வெளியே செல்ல அனுமதி கேட்டால் ராணுவ வீரர்கள் தங்களை தாக்குவதாகவும் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் கடுங்குளிரில் உயிரிழந்து விட்டதாகவும் 4 பேருக்கு உடல் நிலை மோசமடைந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து லாரி உரிமையாளர்களுக்கு தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் லாரி ஓட்டுநர்கள் உணவின்றி குளிரில் தவித்து வருவதால் அவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் செந்தில் குமாரின் மனைவி ராதா கோரிக்கை வைத்துள்ளார்.


Leave a Reply