கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோலார்பட்டி பஞ்சாயத்திற்கு போட்டியின்றி ஊராட்சி தலைவர் தேர்வு செய்யப்படுகின்றார். ஊராட்சி தலைவர் பதவிக்கு அதிமுக, திமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.
ஆனால் அதிமுக வேட்பாளர் ஆறுச்சாமி தவிர மற்ற அனைவரும் வேட்புமனுக்களை திரும்பப் பெற்று விட்டனர். ஊர்மக்கள் ஒன்றுகூடி அதிமுக வேட்பாளர் ஆறுச்சாமியை போட்டியின்றி தேர்வு செய்வதாக எடுத்த முடிவே காரணம் எனக் கூறப்படுகிறது.
இதேபோல் கோலார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர். பின்னர் இவர்கள் அனைவரும் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் விதிமுறைப்படி சின்னம் ஒதுக்க வலியுறுத்தி வேட்பாளர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாகதேவன் பாளையம் ஊராட்சியில் போட்டியிடும் வார்டு உறுப்பினர்களுக்கு சின்னம் ஒதுக்கியதில் குளறுபடிகள் நடந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தேர்தல் விதிமுறைகள் குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து மீண்டும் ஒருமுறை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது.