ரூ.1000 ‘கவனிப்பு’ என தீயாய் பரவிய தகவல்..! கிடைத்ததோ ரூ.100 தான்..!! அமைச்சர் பிரச்சாரத்தில் ‘ஏமாந்த’ மக்கள்!!!

மதுரை அருகே உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் அமைச்சரை வரவேற்க வந்தால் ரூ.1000 கவனிப்பு என்ற தகவல் தீயாய் பரவியது. இதனால் அரக்கப்பறக்க ஓடி வந்த மக்கள், ரூ.100 மட்டுமே கிடைத்ததால் பெரும் ஏமாற்றம் அடைந்து அதிமுகவினரை முற்றுகையிட்டு திட்டித் தீர்த்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் பரபரப்பு களைகட்டத் தொடங்கி விட்டது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகி சின்னங்களும் ஒதுக்கும் பணி நிறைவடைந்ததால், நேற்று மாலை முதலே வேட்பாளர்கள் ஓட்டு வேட்டையில் இறங்கி விட்டனர். ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கட்சி சார்பற்ற முறையில் தேர்தல் நடப்பதால், வேட்பாளர்கள் தங்கள் சொந்த பந்தங்கள், ஆதரவாளர்களுடன் தங்கள் ஊர் தெருக்களில் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

 

இதே போல், மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் அதிமுக மற்றும் திமுக கூட்டணி மட்டுமின்றி, டிடிவி தினகரனின் அமமுகவும் வேட்பாளர்களை களத்தில் இறக்கி விட்டுள்ளது. இப்போது பிரச்சாரமும் சூடுபிடிக்க தொடங்கி விட்டது.

 

இந்த உள்ளாட்சி தேர்தலிலும் பிரச்சாரக் களத்தில் அதிமுக முந்திக்கொண்டு விட்டது என்றே கூறலாம். அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அந்தந்த மாவட்ட அமைச்சர்களும் ஜரூராக பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர்.

 

இது போல் மதுரை மாவட்டத்திலும் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், தனது சொந்தத் தொகுதியான திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட கிராமப் பகுதிகளில் இன்று காலை 6 மணிக்கே பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். உச்சப்பட்டி, கப்பலூர் உள்ளிட்ட பல கிராமங்களில் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தில் கூட்டத்தை திரட்டுவதற்காக, அமைச்சர் ரூ.1000 பொங்கல் இனாம் வழங்கப்போவதாக அதிமுகவினர் தகவலை பரப்பி விட்டுவிட்டனர் போலும். இந்த தகவல் தீயாய் பரவ, பரபரத்த மக்கள் கையில் ரேசன்கார்டு மற்றும் ஜெராக்ஸ் நகலுடன் ஏராளமானோர், வேலைக்கு கூட செல்லாமல் காலையிலேயே திரண்டு விட்டனர்.

கடந்த பொங்கலுக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.1000 பணத்தை, ஊர் ஊருக்கு விழா போல் நடத்தி, அமைச்சரே மேடையில் நின்றபடி அனைவருக்கும் வழங்கினார். அது மட்டுமின்றி, கிராமங்களில் அமைச்சர் பங்கேற்கும் எந்த பொது நிகழ்ச்சியானாலும் சரி, கட்சிக் கூட்டம் என்றாலும் சரி, கூட்டத்திற்கு வருபவர்களுக்கு வேஷ்டி, சேலை, ஹாட் பாக்ஸ் என விதவிதமான பரிசுப் பொருட்களும், கூடவே அன்பளிப்பு கவர்களும் கிடைப்பது வழக்கம்.அதே போல் இப்போதும் அமைச்சர் உதயக்குமார் வழங்கப் போகிறார் என்று நம்பியே கிராமங்களில் பெரும் கூட்டம் திரண்டது.

 

ஆனால் நடந்ததோ வேறு. மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுடன் திறந்த வேனில் வந்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கோ திரளான கூட்டத்தை பார்த்து ஏக உற்சாகமாகிவிட்டது. முதல்வர் எடப்பாடி அரசின் சாதனைகளைப் பட்டியவிட்ட அவர், உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு கைகூப்பி வாக்கு கேட்டார். அத்தோடு பிரச்சாரத்தை முடித்துவிட்டு அமைச்சர் மற்றும் உடன் வந்தவர்கள் அந்த இடத்தை விட்டு ஜீட் விட ஐயோ 1000 ரூபாய் என்னாச்சு என கூட்டத்தினர் அதிர்ச்சியில் புலம்ப ஆரம்பித்தனர்.

 

இந்நிலையில், அமைச்சர் சென்ற பின், கூட்டத்திற்கு வந்திருந்தவர்களுக்கு, உள்ளுர் அதிமுகவினர் தலைக்கு 100 ரூபாயை கவனிப்பாக பகிரங்கமாக கொடுக்க ஆரம்பித்தனர். அதையும் போட்டா போட்டி போட்டுக் கொண்டு முண்டியடித்து வாங்கியவர்கள், ரூ.1000 என்னாச்சு என கேள்வி கேட்டு துளைத்தெடுத்தனர். அதற்கு, பொங்கல் பரிசெல்லாம் தேர்தலுக்கு பின்னாடி தான். அமைச்சர் பிரச்சாரத்தில் கூட்டத்தை கூட்டத்தான் சும்மா சொன்னோம் என அதிமுகவினர் கூலாக பதிலளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இந்த100 ரூபாய்க்காகவா எங்களை ஏமாற்றி காக்க வைத்தீர்கள் என்று சரமாரியாக திட்டித் தீர்த்தனர். அது மட்டுமின்றி, 100 ரூபாய் கூட பலருக்கும் கொடுக்காமல் அதிமுக நிர்வாகிகள் அலைக்கழிக்க, ஒரு கூட்டம் அவர்கள் பின்னாலேயே சுற்றிச் சுற்றி வந்த அவலமும் அரங்கேறியது.

 

தமிழக வாக்காளர்களில் பெரும்பாலோர் ஓட்டுக்கு பணம் வாங்கி பழகிவிட்டனர்.தன் வாக்குரிமையை பணத்திற்காக அடகு வைப்பது குற்றம் என்பதை இவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. சும்மா வருவதை ஏன் விடுவானேன்? நம்ம காசைத் தானே தாராங்க? என பசப்புக் காரணமும் கூறி, ஓட்டுக்கு பணம் என யார் கொடுத்தாலும் வாங்க வரிசை கட்டத் தொடங்கி விட்டனர். அது இப்போது, இந்த உள்ளாட்சித் தேர்தலிலும் கூடுதலாக கிடைக்காதா? என்ற பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளதுதான் கொடுமைடா சாமீ ரகமாகி விட்டது.


Leave a Reply