தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து மிரட்டி பணம் பறித்து வரும் கும்பலை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்து உள்ளனர். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான தானாசேர்ந்தகூட்டம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா, நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் போலி சிபிஐ அதிகாரிகளாக நடித்து ரெய்டு நடத்தி பணத்தை எடுத்துச் செல்வார்.
திரைப்படத்தை மிஞ்சும் வகையில் வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் சிபிஐ அதிகாரிகள் போல நடித்து பலரை ஏமாற்றி வரும் ஒரு கும்பல் முகாமிட்டு உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து கழிஞ்சூர் பன்னீர்செல்வம் தெரு பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு பதுங்கி இருந்த ஹரி, மைதீன் ஆகிய இருவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து அங்கு சோதனையிட்ட போலீசார் சிபிஐ அதிகாரி என்பதற்கான போலி அடையாள அட்டை, காவலர் சீருடை உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் பதுக்கி வைத்திருந்த 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
இவர்கள் இருவரும் அந்த பகுதிக்கு தொழிற்சாலையில் சமையல் வேலை பார்த்து வந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது. பணக்காரர்கள், தொழிலதிபர்களை குறி வைத்து பணம் பறித்து வந்த இவர்கள் கார், பைக் என வாழ்க்கையை உல்லாசமாக அனுபவித்து வந்துள்ளனர். இதனையடுத்து இவர்களால் பாதிக்கபட்டவர்கள் யார் என்ற விவரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போலி சிபிஐ அதிகாரிகளாக நடித்து தமிழகம் மற்றும் ஆந்திராவில் பல இடங்களில் தொழிலதிபர்களை மிரட்டி பல லட்சம் ரூபாய் பறித்து இருக்கக்கூடும் எனவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த கும்பலை சேர்ந்த பலரும் விரைவில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.