இராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தமே 492 வாக்காளர்கள் உள்ள சிறுகுடி ஊராட்சியில் தலைவர் பதவி 28.60 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது. ஏலம் எடுத்துள்ளவரைத் தவிர வேறு யாரும் போட்டியிடக்கூடாது என ஊர்க் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், போட்டியிட விரும்பிய பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ள தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே, ஊர், ஊருக்கு பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளை ஏலம் விடுவது தொடர்கதையாகி விட்டது. இந்த ஏலத் தொகையை ஊர்க் கோவில் கட்ட, ஊரின் பொதுச் செலவுக்கு வைத்துக் கொள்வதற்காக என புதுப்புது காரணங்களைக் கூறி, பல லட்சங்களுக்கு ஏலம் விடுகின்றனர். அது மட்டுமின்றி, மாதிரித் தேர்தல் நடத்தி தேர்வு செய்வது, குலுக்கல் முறையில் தேர்வு செய்வது, அடாவடியாக மிரட்டல் மூலம் பதவிகளை கைப்பற்றுவது என பல்வேறு நூதன முறைகளையும் கடைப்பிடிக்கின்றனர்.
ஜனநாயக முறையில் நடத்த வேண்டிய உள்ளாட்சித் தேர்தலை கேலிக்கூத்தாக்கும் வகையில் இப்படி ஏலம் விடும் வழக்கத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அரசுத் தரப்பிலும், இப்படி முறைகேடாக பதவிகளை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கைகள் பாயும் என்று எச்சரித்திருந்தாலும் பல்வேறு ஊர்களில் இந்த ஏலம் விடும் வழக்கம் தொடரவே செய்கிறது.
இது போன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் 492 வாக்காளர்களே உள்ள சின்னஞ் சிறு ஊராட்சியில், தலைவர் பதவி 28 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன விவகாரம், ஆடியோ ஆதாரத்துடன் நமது குற்றம் குற்றமே புலனாய்வு இதழுக்கு தகவல் கிடைத்துள்ளது. தலைவர் பதவியை ஏலம் விட்டுவிட்டதால் வேறு யாரும் போட்டியிடக்கூடாது என ஊர்க் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளதால், போட்டியிட்டு ஜெயித்து விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தவர்களுக்கு அதிர்ச்சி கொடுப்பதாக அமைந்துள்ளது ஏலம் விவகாரம்.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஓன்றியத்திற்கு உட்பட்ட சிறுகுடி ஊராட்சித் தலைவர் பதவி தான் ஏலம் விடப்பட்டு இப்போது சர்ச்சையாகியுள்ளது. மொத்தமே 492 வாக்காளர்கள் உள்ள சின்னஞ் சிறு ஊராட்சி தான் சிறுகுடி.இங்கு பல தரப்பட்ட மக்கள் வசித்தாலும், ஊராட் சிக்கு பெரிய வருமானம் கிடையாது என்றே கூறப்படுகிறது.இந்த ஊராட்சியில், தலைவர் பதவிக்கு இதுவரை தேர்தல் நடத்தியே தேர்வு செய்யப்பட்டு வந்தனர். கடைசியாக இருளாயி பெருமாள் என்ற பெண்ணும் தேர்தலில் போட்டியிட்டு152 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தலைவராக இருந்தார். இதனால் இம்முறையும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு பின்னாள் தலைவரான இருளாயி பெருமாள், கஸ்தூரி, விஜயா என சில பெண்கள் போட்டியிட முனைப்பு காட்டி வந்தனர்.
ஆனால், இந்த முறையோ தலைவர் பதவியை ஏலம் விட ஊர் முக்கியஸ்தர்கள் சிலர் திடீரென முடிவெடுத்துள்ளனர். இதற்குக் காரணம் இந்த ஊரைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளில் வேலை பார்ப்பதால், சில குடும்பத்தினர் செல்வச் செழிப்பில் மிதப்பது தான். தேர்தலில் போட்டியிட்டால் ஜெயிக்க முடியாது என்பதால், பல லட்சங்களை கொட்டியாவது பதவியைக் கைப்பற்றி விடலாம் என்று தூண்டி விட்டுள்ளனர்.
அதன்படி ஊர் முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் ஏலமோ ஏலம் என தலைவர் பதவி ஏலம் விடப்பட்டது. இதிலும் 4 பேர் போட்டி போட்டு ஏலம் கேட்க லட்சங்களில் ஏலத் தொகை கூடிக் கொண்டே போனது. கடைசியில் மகேஷ்வரன் என்பவரின் மனைவி போதும் பொண்ணு என்பவர் 28 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளார். இவருடைய மகனும் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால், இந்தக் குடும்பத்தின் செல்வச் செழிப்பு சமீப காலமாகவே அதிகம் என்று கூறப்படுகிறது.
அதன் பின், இந்தத் தொகையை இன்று இரவுக்குள் ஊர் பொதுவில் போதும் பொண்ணு செலுத்த வேண்டும் என்றும், நாளை அவர் மட்டுமே தலைவர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்வது, வேறு யாரும் மனு செய்யக் கூடாது என ஊர்க் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளதாம். இதனால் கடந்த முறை தலைவராக இருந்த இருளாயி பெருமாள் உள்ளிட்ட சிலர் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருந்தும், ஊர்க் கட்டுப்பாட்டுக்கு கட்டுப்பட்டு தேர்தலில் நிற்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ள அவலம் ஏற்பட்டுள்ளது.
இதை விட பெரிய கொடுமை என்னவென்றால் இந்த ஏலத் தொகையை பங்கு போட போட்டுள்ள கணக்கு தான் பகீர் ரகமாக உள்ளது. ஊரில் உள்ள வாக்காளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் கொடுக்க உள்ளனராம். ஏலத்தில் பங்கேற்ற பிறருக்கு தலா ஒரு லட்சம் ரூபாயாம்.மீதத்தொகையை ஊர்ப் பொதுக்கணக்கில் வைப்புத் தொகையாக இருப்பு வைக்கப் போகின்றனராம்.
சிறுகுடி ஊராட்சித் தலைவர் பதவிக்கு ஏலம் நடத்தப்பட்டது குறித்த ஆதாரப்பூர்வ ஆடியோ தகவலும் நமது குற்றம் குற்றமே இதழுக்கு கிடைத்துள்ளது. நமக்கு கிடைத்த ஆதாரத்தை வைத்து, வெளியுலகுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக இந்த ஜனநாயக விரோதமான ஏலம் விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் கடமையை குற்றம் குற்றமே இதழ் செய்துள்ளது.சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் ஜனநாயகம் ஓரளவுக்காவது பிழைக்கும் என்பது நிச்சயம்.