கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள வனபத்ர காளியம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் கடந்த 11 ஆண்டுகளாக தமிழக கோவில்கள் மற்றும் மடங்களுக்கான சிறப்பு நலவாழ்வு நடைபெற்று வருகிறது.
அதன் ஒருபகுதியாக 12 வது தமிழக கோவில் மற்றும் மடங்களுக்கு சொந்தமான நல்வாழ்வு முகாம் இன்று துவங்கியது.இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி இந்த முகாமின் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து கோவில் மற்றும் மடங்களை சேர்ந்த 28 யானைகள் முகாமில் பங்கேற்கின்றன.இதுவரை 26 யானைகள் முகாமிற்கு வந்துள்ள நிலையில் புதுவையை சேர்ந்த இரு யானைகள் நாளை முகாமிற்கு வருகின்றது. இன்று முதல் 48 நாட்களுக்கு கோவில் மற்றும் மடங்களை சேர்ந்த யானைகளுக்கு நடைபயிற்சி, மூலிகை உணவு, பசுந்தீவணம், மருத்துவ சிகிச்சை போன்றவை வழங்கப்பட இருக்கின்றது.
முகாமினை இந்து சமய அறநிலைய துறை ஆணையர் பணீந்திர ரெட்டி ரிப்பன் வெட்டி துவங்கிவைத்தார். பின்னர்,அலங்கரித்து நிறுத்தப்பட்டு இருந்த கோவில் யானைகளுக்கு கரும்பு, வெல்லம் ,பழங்களை கொடுத்து முகாமிட்டு துவங்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்த முகாமிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் கால்நடை,வனத்துறை, இந்து சமய அறநிலைய துறை இணைந்து ஏற்பாடுகள் செய்துள்ளது எனவும், 48 நாட்கள் இந்த முகாம் நடைபெறுகின்றது எனவும் தெரிவித்தார்.
மேலும், யானைகளுக்கு நடை பயிற்சி, பசுந்தீவணம், மருத்துவம் போன்றவை வழங்கப்படுகின்றது எனவும்,இந்த ஏற்பாடுகள் கோவில் யானைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். யானைகள் இங்கு வந்தவுடன் சந்தோஷமாக இருக்கின்றது எனவும், யானைகளின் தேக ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக இந்த முகாம் அமைந்துள்ளதாகவும்,யானைகள் முகாமிற்காக 1.50 கோடி ரூபாய் தமிழக அரசு ஒதுக்கி் இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.