பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தூக்கு தண்டனை

பாலியல் குற்றங்கள் தொடர்பான விசாரணையை விரைவாக முடித்து 21 நாட்களில் மரண தண்டனை வழங்கும் திஷா மசோதாவை ஆந்திர மாநில அரசு நிறைவேற்றியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வலுவான சட்டங்களை கொண்டு வர வேண்டும் என்ற குரல் நாடு முழுவதும் உரக்க ஒலித்துக் கொண்டிருக்கிறது.

 

இச்சூழலில் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைவாக தண்டிக்கும் வகையில் ஆந்திர சட்டப்பேரவையில் திஷா மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. பாலியல் குற்றங்கள் தொடர்பாக காவல்துறை விசாரணை 7நாட்களில் முடிக்கப்பட வேண்டும்.

 

14 நாட்களில் நீதிமன்ற விசாரணை முடித்து வைக்கப்பட வேண்டும். இதன்படி 21 நாட்களில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க இந்த மசோதா வழிவகை செய்துள்ளது. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கவும் ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

இதன்மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க முடியும். இந்த நீதிமன்றங்களில் பாலியல் வன்கொடுமை, கூட்டு பாலியல் வன்கொடுமை, அமில வீச்சு, கடத்தல், ஆபாச படம் எடுத்தல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் போக்சோ சட்டத்தில் பதிவான வழக்குகள் விசாரிக்கப்படும்.

 

புதிய மசோதாவின் சமூகவலைதளங்கள் மூலம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவர்களுக்கு முதலில் இரண்டு ஆண்டுகளும், திருந்தாமல் மீண்டும் தவறிழைத்தால் நான்கு ஆண்டுகளும் தண்டனை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகும் குற்றவாளிகளுக்கான தண்டனையை 5 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளாக அதிகரிக்கவும் ஆந்திரா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


Leave a Reply