உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத்தாக்கல் ஒரு புறம் விறுவிறுப்பாக நடந்து வருகிற நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளிலும் வேட்பாளர்களை போட்டியின்றி தேர்ந்தெடுப்பதாகக் கூறி, பதவிகளை பகிரங்கமாக ஏலம் விடுவது, மாதிரி தேர்தல் நடத்துவது, குலுக்குச் சீட்டு முறையில் தேர்ந்தெடுப்பது என பல்வேறு நூதன முறைகளை கடைப் பிடிப்பதும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில், பல்வேறு தடைகளைத் தாண்டி, 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு வரும் 27, 30-ந் தேதிகளில் தேர்தல் நடைபெறுவது உறுதியாகிவிட்டது. கடந்த திங்கட்கிழமை வேட்பு மனுத்தாக்கலும் தொடங்கி, நாளை மறுதினம் முடிவடைவயும் நிலையில் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
இதற்கிடையே இந்த உள்ளாட்சிப் பதவிகளுக்கு தேர்தலே நடத்தாமல், போட்டியின்றி தேர்ந்தெடுப்பதாகக் கூறி, விதவிதமான நூதன முறைகளை பல ஊர்களிலும் கையாள்வதாக வெளியாகும் செய்திகள் தான் இப்போது தமிழகம் முழுதுமே ஹாட் டாபிக்காக உள்ளது. இதனை தடுக்க கடும் நடவடிக்கை எடுப்பதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும், இந்தக் கலாச்சாரம் புற்றீசல் போல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவி இந்த நூதன முறைகேடுகள் நடைபெறத்தான் செய்கிறது என்றே தெரிகிறது.
இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், இந்தக் கலாச்சாரத்திற்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது கடலூர் மாவட்டம் நடுக்குப்பம் ஊராட்சியில்தான். அங்கு ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சத்திற்கும், துணைத் தலைவர் பதவி ரூ.15 லட்சத்திற்கும் ஏலத்தில் விடப்பட்டதாக முதன்முதலாக செய்தி வெளியாகி பரபரப்பானது. தொடர்ந்து திருச்சி அருகே ஏலமாம்.. ராமநாதபுரம் மாவட்டத்தில் பல ஊராட்சிகளில் பல லட்சங்களுக்கு ஊராட்சித் தலைவர், உறுப்பினர் பதவிகள் ஏலமாம்… என செய்திகள் வெளியாக ஆரம்பித்தன.
இப்போதோ, போட்டியைத் தவிர்ப்பதற்காக, நிஜ தேர்தல் போன்றே பெயர், சின்னம் அச்சடித்த வாக்குச் சீட்டுகள் மூலம் மாதிரி தேர்தல் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல் வெளியானது. ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமை தாங்கி, தங்கச்சிமடம் ஆகிய ஊர்களில் இது போல் மாதிரித் தேர்தல் நடத்த நடந்த முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் அதிரடியாக தடுத்தும் நிறுத்தியுள்ளது.
இது போல், அதிர்ஷ்டசாலிகளை தேர்வு செய்வது போல் குலுக்கல் முறையில் தேர்வு செய்வதும் ஒரு சில இடங்களில் நடைபெறுகிறது.தேனி மாவட்டம் ஸ்ரீரங்கபுரம் ஊராட்சியில், 8 இடங்களுக்கான வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட பலரும் நான், நீ என முண்டியடித்துள்ளனர். இதனால் போட்டியைத் தவிர்க்க, விருப்பம் தெரிவித்த அனைவரின் பெயர்களையும் தனித் தனிச் சீட்டுகளில் எழுதி, குலுக்கல் முறையில் 8 பேரை தேர்வு செய்த தகவலும் வெளியாகியுள்ளது.
இது மட்டுமா? சில ஊர்களில் ஆள் பலம், பணபலம், அரசியல் பலம் படைத்த சிலர் மிரட்டல், உருட்டல் மூலம் பதவிகளை கைப்பற்றும் முயற்சிகளும் அரங்கேறி வருவதாகவும் பகீர் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது போன்ற முயற்சியை தடுக்க முயன்று தட்டிக் கேட்ட வங்கி மேலாளர் பதவி வகிக்கும் இளைஞர் ஒருவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அடித்தே கொல்லப்பட்டுள்ள சம்பவமும் அரங்கேறியுள்ளது.
ஊராட்சிப் பதவிகளுக்கு ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தி தேர்வு செய்வதை விடுத்து, இது போல் பல நூதன முறைகளில் தேர்வு செய்யும் கலாச்சாரம் இந்தத் தேர்தலில் விஷம் போல் பரவி வருகிறது. இது போன்ற ஜனநாயகத்துக்கு புறம்பான வழியில் ஈடுபடுவோரை கடும் தண்டனை, பதவிப் பறிப்பு போன்ற கடுமையான நடவடிக்கைகள் மூலம் தடுக்க முடியும் என்பதை அரசுத் தரப்பில் உணர்த்த வேண்டும். அப்போதுதான் ஜனநாயக வழியைப் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் பரவலாகும்.