விழுப்புரத்தில் மூணு நம்பர் லாட்டரியால் கடனாளியான நகைத்தொழிலாளி, தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் சயனைடு விஷம் குடித்து உயிரை மாய்த்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாவதற்கு முன், மூணு நம்பர் லாட்டரியை ஒழியுங்கள், மற்றவர்களாவது பிழைக்கட்டும் என விரக்தியுடன் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளது பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
விழுப்புரம் சித்தேரிகரை சலாமத் நகரைச் சேர்ந்த நகைத் தொழிலாளி அருண்.32 வயதான அருணுக்கு, சிவகாமி என்ற மனைவியும், ஆறு வயது மகள் பிரியதர்ஷினி, மூன்று வயது மகள் யுவஸ்ரீ நான்கு மாத குழந்தை பாரதி ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
சொந்த வீட்டில் குடியிருந்து வந்த அருண், நகைத் தொழில் நலிவடைந்ததால், விழுப்புரத்தில் சட்டவிரோதமாக கொடிகட்டிப் பறக்கும் மூன்று நம்பர் லாட்டரிச் சீட்டுகளை வாங்க ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் லாட்டரிச் சீட்டுக்கு அடிமையாகியுள்ளார். ரூ.100 முதல் 500 வரை விற்கப்படும் இந்த லாட்டரிச் சீட்டுகளை, பரிசு விழுந்து விடாதா? என தினமும் வாங்கி ஏமாந்த அருண், பல லட்சங்களை இழந்து கடனாளி ஆகிவிட்டார். தொழில் நஷ்டம், லாட்டரியால் பணம் இழந்த விரக்தியில் குடும்பத்துடன் தற்கொலை செய்யும் முடிவுக்கு அருண் வந்து விட்டார்.
இதனால், நகை செய்ய உயயோகிக்கும் நகை செய்ய பயன்படுத்தும் சயனைடு விஷத்தை தனது 3 பச்சிளம் குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். ஒன்றுமறியா பருவத்து சின்னஞ் சிறு குழந்தைகளும், தந்தை கொடுத்த விஷத்தை என்னவென்று தெரியாமலே குடித்து சிறிது நேரத்திலேயே உயிரை விட்டனர். இதன் பின்னர் தனது மனைவி சிவகாமியை தோளில் சாய்த்தபடி தமது செல்போனில் வீடியோ மூலம் விரக்தியில் பேச்சை பதிவு செய்துள்ளார் அருண்.அதில், இனியாவது விழுப்புரத்துல மூணு சீட்டை ஒழியுங்கள். இதனால் என்னைப் போன்ற மேலும் பலரின் உயிர் போகாமல் காப்பாற்ற முடியும். என் குழந்தைகளை விஷம் கொடுத்து உயிரை மாய்க்கச் செய்த தாமும் மனைவியும் விஷம் அருந்தி தற்கொலை செய்யப் போகிறோம் என்ற ரீதியில் வீடியோவில் அருண் பேசியுள்ளார்.
இந்த வீடியோ பதிவை தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி விட்டு, கூறியபடியே மனைவியுடன் விஷ மருந்தியுள்ளார். வாட்ஸ ப்பில் வந்த வீடியோவைப் பார்த்த அருணின் நண்பர்கள் பதறியடித்து ஓடி வந்துள்ளனர்.பூட்டியிருந்த வீட்டை உடைத்து உள்ளே சென்றவர்களுக்கு பெருத்த அதிர்ச்சி. 5 பேரும் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ந்து போய் விட்டனர்.
தமிழகத்தில், 2001-ல் ஜெயலலிதா முதல்வராக இருந்த போதே லாட்டரிக்கு தடை போட்டு பல வருடங்கள் கடந்து விட்டன. ஆனாலும் ஒரு நம்பர், 3 நம்பர் லாட்டரிச் சீட்டுகளை விற்கும் தொழில், பல முக்கிய நகரங்களில் இன்னமும் சட்ட விரோதமாக அரங்கேறியே வருகிறது. இதைத் தடுக்க வேண்டிய உரிய அதிகாரிகளின் துணையுடனே இந்த லாட்டரித் தொழிலை, சில சமூக விரோதிகள் ஜம்ஜம்மென்று நடத்தியே வருவது கண்கூடாகத் தெரிகிறது. இப்போது, மனைவி, 3 குழந்தைகளுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்த அருண், லாட்டரிக்கு அடிமையாகி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டுள்ள சோகம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல, இப்போது மனைவி மற்றும் ஒன்றுமறியா பச்சிளம் குழந்தைகளுடன் அருண் தற்கொலை செய்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த பின்பே, லாட்டரி நடத்தும் கள்ளப் பேர்வழிகளை ஒழிக்கப் போகிறேன் பேர்வழி என அதிகாரிகள் கண்துடைப்புக்கு சில நடவடிக்கையில் இறங்குவார்கள். பரபரப்பு ஓய்ந்த சில நாட்களில் மீண்டும் இந்த லாட்டரித் தொழிலை கண்டு கொள்வி மாட்டார்கள் என்பது தான் நிதர்சன உண்மை. இனியாவது, சட்ட விரோத தொழிலுக்கு துணை போகும் அதிகாரிகள் திருந்த வேண்டும். கள்ளச்சாராயத்தை அடியோடு ஒழித்தது போல் லாட்டரித் தொழிலுக்கும் முடிவு கட்டவும் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.