தீவைத்து கொளுத்தப்பட்ட உன்னாவ் பெண்: உயிருக்கு போராடும் பரிதாபம்

உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரிக்கப்பட்ட பெண்ணுக்கு டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமாகி இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் 10 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தனர்.

 

வழக்கு விசாரணைக்காக அந்தப்பெண் தனது கிராமத்திலிருந்து நீதிமன்றத்திற்கு புறப்பட்டார். அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி 5 பேர் மண்ணெண்ணெய் ஊற்றி உயிரோடு தீ வைத்து கொளுத்தினர். இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் லக்னோவில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

 

டெல்லி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் பெண்ணின் உடல் நிலை மிக மோசமாக உள்ளது என தெரிவித்திருக்கின்றனர். மருத்துவர் குழு ஒன்று பெண்ணின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், கூறியிருக்கிறார்கள். முன்னதாக வாக்குமூலம் அளித்த அந்தப் பெண் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி நபர்களை தீ வைத்ததாக தெரிவித்துள்ளார்.

 

அப்பெண்ணுக்கு தீவைத்த 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் 2 பேர் 10 நாட்களுக்கு முன்பு இதே வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply