உள்ளாட்சித் தேர்தலுக்கு உச்சநீதி மன்றம் தடை விதிக்குமா? – நாளை காலை தீர்ப்பு!!

உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை கோரும் வழக்கில், விசாரணை முடிவடைந்த நிலையில், நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் ஊரகப் பகுதி உள்ளாட்சிகளுக்கு வரும் 27மற்றும் 30-ந் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட நிலையில் வார்டு மறுவரையறை செய்யாமல் தேர்தல் நடத்த திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

 

மேலும் சட்டப்படி முறையாக தேர்தலை நடத்தக்கோரியும், தற்போது அறிவிக் கப்பட்டுள்ள தேர்தலை ரத்து செய்யக் கோரியும் திமுக தரப்பு மட்டுமின்றி12 பேர் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் நடந்த இந்த வழக்கு விசாரணையில், திமுக தரப்புக்கும், தமிழக அரசு தரப்புக்கும் இடையே வழக்கறிஞர்கள் காரசார விவாதம் நடைபெற்றது.

 

உச்சநீதிமன்ற நீதிபதிகளும், தமிழக தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை விமர்சித்தவை. அத்துடன், 3 ஆண்டுகள் வரை காலம் கடத்திய நிலையில், இப்போது முறையாக தேர்தலை நடத்தாதது ஏன்? மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட நிலையில் வார்டுகள் மறு வரையறை செய்யாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். மேலும், தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிடப் போவதாகவும் அறிவித்தனர்.

 

இதனால் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளி வைக்கலாம் என தமிழக அரசுத் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் திமுக தரப்பிலோ, ஒட்டு மொத்தமாக தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

 

இந்நிலையில் இன்று வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை நாளை காலை 10.30 மணிக்கு வழங்குவதாக நீதிபதிகள் அறிவித்தனர். இதனால், ஏற்கனவே தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தபடி நாளை காலை வேட்பு மனுத்தாக்கல் துவங்க உள்ள நிலையில், தேர்தல் நடக்குமா? தள்ளிப்போகுமா? என்ற சந்தேகம் இன்னும் நீடிக்கிறது. இதனால் நாளை வெளியாகவுள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply