புதுச்சேரியில் மீனவர்களின் வலையில் உருளை வடிவ மர்ம பொருள் சிக்கியது. அதிகாரிகள் நடத்திய ஆய்வில் அது பிஎஸ்எல்வி ராக்கெட்டின் பாகம் என தெரியவந்தது. புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
புதுச்சேரியில் இருந்து பத்து கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது வலையில் உருளை வடிவிலான ஒரு பொருள் சிக்கியது. அதை இழுக்க முடியாததால் சக மீனவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து 6 படகுகளில் அங்கு சென்ற மீனவர்கள் நீண்ட நேரம் போராடி அந்த பொருளை கரைக்கு கொண்டு வந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அதை சோதனை செய்தனர். அது ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருளை நிரப்பி செல்லும் உருளை என்பது தெரியவந்தது.
30 அடி நீளமும் 1500 கிலோ எடையும் கொண்ட அந்த உருளையில் PSMOXL 1, 22.03.2019 என குறிப்பிடப்பட்டுள்ளது. இது செயற்கை கோள்களை விண்ணுக்கு எடுத்துச் செல்லம் ராக்கெட்டுகளில் பயன்படுத்தும் கருவி என தெரியவந்துள்ளது.
அதற்குள் ராக்கெட்டின் பாகம் கரை ஒதுங்கியதாக தகவல் பரவவே உள்ளூர் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் அதனை காண குவிந்தனர். இதனிடையே இஸ்ரோ அதிகாரிகள் நேரில் வந்து இதனை ஆய்வு செய்தனர். கடந்த 27ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட்டில் இருந்த எரிபொருள் உருளை என்பது தெரியவந்தது.
ராக்கெட்டின் பாகம் சிக்கியதால் வலைகள் மற்றும் படகுகள் சேதம் அடைந்ததாக மீனவர்கள் கூறுகின்றனர். 4 படகுகள் மற்றும் ஆறு வலைகள் சேதம் அடைந்ததாகவும் அதற்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றும் மீனவர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.