90 லட்சம் ரூபாயை வீசி எறிந்து திருமண ஊர்வலத்தை நடத்திய தொழிலதிபர்

90 லட்சம் ரூபாயை வீசியெறிந்து திருமண ஊர்வலத்தை நடத்தியுள்ளார் ஒரு தொழிலதிபர். இது சினிமா ஷூட்டிங் அல்ல. குஜராத்தில் தொழிலதிபர் ஒருவரின் திருமண வரவேற்பு ஊர்வலத்தில் நடத்தப்பட்ட சம்பவத்தின் புகைப்படம் தான் இவை.

 

அம்மாநிலம் ஜாம்நகர் அடுத்துள்ள சேலாம் என்ற கிராம பகுதியை சேர்ந்தவர் சுசிராஜ் சிங் ஜடேஜா. காண்ட்ரக்ட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வரும் இவர் ஒரு ஆடம்பரப் பிரியர். சமூக வலைதளமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் தமது பதிவுகள் மூலம் ஆடம்பர வாழ்க்கையை வெளிப்படுத்துவது வழக்கம்.

 

இதற்கிடையே தொழிலதிபர் சுசிராஜ் சிங் ஜடேஜாவிற்கு திருமணம் நடைபெற்றது. திரைப்படங்கள், உலக பணக்காரர்கள் குடும்பத்தாரின் திருமண ஏற்பாடுகளை மிஞ்சும் அளவிற்கு மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சொந்த ஊரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சி ஊரின் முக்கிய சாலைகள் வழியாக காரில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார் ருசிராஜ் சிங் ஜடேஜா.

அரசியல் கட்சிகளின் பேரணிக்கு நிகராக கூட்டங்கள் பின்தொடர பாடல்களை பின்னால் ஒலிக்கவிட்டு மணமகன் ஊர்வலம் நடைபெற்றது. அத்தோடு இல்லாமல் பணத்தை வீசி எறிய தொடங்கினர் சுசிராஜ் மற்றும் அவரது உறவினர்கள். பத்து ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை கட்டுகட்டாக மக்கள் மீது பணத்தை வீசி எறிய தொடங்கியதால் அந்த பகுதியே பணம் மழையாக காட்சியளித்தது.

 

அப்போது 90 லட்சம் ரூபாய் வரை பணத்தை வழிநெடுகிலும் வாரி இறைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மணமகன் ருசிராஜ் சிங் ஜடேஜாவும், மணமகளும் ஹெலிகாப்டரில் பறந்து மண்டபத்திற்கு என்ட்ரி கொடுத்தனர்.

 

மணமகனின் அண்ணன் புதுமண தம்பதிக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு காரை பரிசாக வழங்கியதுடன் திருமணத்தின் போது பெறப்பட்ட நன்கொடைகள் கோசாலைகளுக்கு தானமாக வழங்கப்பட்டன. இவ்வாறாக தொழிலதிபரின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தாலும் அவரது கருப்பு பணத்தை வெள்ளையாக்க இப்படி பண மழை பொழிந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது


Leave a Reply